பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு : ஸ்டாலின்

public

பேருந்து கட்டண உயர்வை கைவிடவில்லை என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜனநாயக ரீதியில் மாபெரும் அறப்போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்று, திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே “டீசலுக்கும், பெட்ரோலுக்கும் வாட் வரியை” அதிகரித்து இன்றைக்கு அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் அன்றாடம் பயணம் செய்யும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் மறைமுக கட்டண உயர்வை புகுத்தியிருக்கிறது “குற்றவாளி”க்கு குற்றவேல் புரியும் பினாமி அதிமுக அரசு. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை உரிய காலத்தில் நடத்த முன்வருவதில்லை. ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தொகை கூட வழங்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் கொடுமை நீடிக்கிறது. மேலும் அவர்களிடமிருந்து பிடித்தம் செய்த 5000 கோடி ரூபாயை திரும்ப வழங்காமல் வஞ்சித்து வருகிறது அதிமுக அரசு. போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலை இதுவென்றால், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் “பினாமி” அரசு கொண்டு வந்திருக்கும் “திரைமறைவு” கட்டண உயர்வு சாமான்ய மக்களை திடுக்கிட வைத்துள்ளது. கட்டண உயர்வு என்று நேரடியாக அறிவிப்பு செய்யாமல் ஏற்கனவே இருக்கின்ற சாதாரண பேருந்துகளை “விரைவுக் கட்டண பேருந்துகளாக” மாற்றி மக்களிடம் வழிப்பறி நடத்தி வேட்டையாடுவது அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை மாநகரத்தில் 3689 அரசு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சாதாரண கட்டணத்தில் இதுவரை இயக்கப்பட்டுவந்த பேருந்துகள் 1230. அதில் 766 பேருந்துகளை “விரைவு கட்டண பேருந்துகளாக” அதிரடியாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் முதல் கட்டண நிலையில் மூன்று ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம் ஐந்து ரூபாய் என்று “விரைவு கட்டணமாக” உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஸ்டேஜ்ரீதியிலான கட்டணத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் சாதாரணக் கட்டணத்திற்கும், விரைவுக் கட்டணத்திற்கும் இடையிலான உயர்வு ஏழு ரூபாய் வரை அதிகமாக இருக்கிறது. அதாவது ஸ்டேஜ் வாரியாக சாதாரண கட்டணம் மூன்று ரூபாய் முதல்14 ரூபாய் என்றும், விரைவுக்கட்டணம் 5 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கான்டிராக்டில் “கமிஷன்” அடிப்பது குற்றவாளி வழி காட்டும் ஆட்சியில் வெளிப்படையாக நடத்தப்படுகிறது. பிளக்ஸ் போர்டு வைத்தே விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் மக்களை பாதிக்கும் “பேருந்துக் கட்டணம்” மர்மமான முறையில் உயர்த்தப்படுகிறது.

அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள மர்மத்தின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் விரைவுப் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும். ஆனால் இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு “விரைவு பேருந்துகள்” அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை தான் அதிகமாகும் சூழ்நிலையில் மக்கள் கட்டாயமாக விரைவு பேருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகி விட்டது.பணிமனை வாரியாகப் பார்த்தால் பெரம்பூர் பணிமனையிலிருந்து புறப்படும் பேருந்துகளில் 74 பேருந்துகள் விரைவுக் கட்டணப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் வட பழனியில் 73 பேருந்துகள், அயனாவரத்தில் 64 பேருந்துகள், கலைஞர் நகரில் 66 பேருந்துகள், பூந்தமல்லியில் 38 பேருந்துகள், அண்ணா நகரில் 34 பேருந்துகள், வியாசர்பாடியில் 38 பேருந்துகள் என்று சென்னை மாநகரில் உள்ள 32 பணிமனைகளில் உள்ள பேருந்துகளும் “விரைவுக்கட்டணப் பேருந்துகளாக” மாற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே பால் விலை ஏற்றத்தாலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் இல்லாத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த பேருந்துக் கட்டண உயர்வால் கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.

குறிப்பாக பூ விற்போர், காய்கறி விற்போர், மீன் விற்போர் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளார்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். ஆனால் இவை பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப் படாமல் அரசு போக்குவரத்துக் கழகங்களை “பினாமி” அரசு “மக்கள் விரோத கழகங்களாக” மாற்றும் “போக்குவரத்துத்துறை அமைச்சரின்” செயலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டுகொள்ளாமல் பொதுப்பணித்துறை “டெண்டர்கள்” பற்றி விவாதித்துக் கொண்டிருப்பது மக்களின் பொறுமையைச் சோதித்துப் பார்ப்பதாக இருக்கிறது. டீசல் விலை உயர்வு 43 சதவீதமாக இருந்த போதும் 2006 முதல் 2011 வரையிலான கழக ஆட்சியில் பேருந்து கட்டணங்களை தலைவர் கருணாநிதி ஏற்றவில்லை. எத்தனையோ முறை அதிகாரிகள் அந்த கோரிக்கையை தலைவர் கருணாநிதியிடம் முன்வைத்தும், மக்களை பாதிக்கும் எந்த யோசனைக்கும் “முடியாது” என்று உறுதியாக மறுத்தார். அது மட்டுமின்றி முதல் வகுப்பிலிருந்து பிளஸ் டூ மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் கொடுத்து அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி கல்வி கற்க பாடுபட்டார். ஏன் கல்லூரி மாணவர்களுக்கு கூட 50 சதவீதக் கட்டணத்தில் பஸ் பாஸ் அளித்து அவர்களும் எளிதில் கல்லூரிகளுக்கு சென்று வர வழி வகுத்தார். மாணவர்கள், இளைஞர்கள், சாமான்ய மக்கள் என்று அனைவருக்காகவும் அன்றைக்கு பாடுபட்டது தலைவர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசு.

ஆனால் இதற்கு எல்லாம் மாறாக மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு புறமிருக்க, மாநில அரசே தனியாக பெட்ரோல், டீசல் மீதான “வாட்” வரியை உயர்த்தி வறுமையில் வாடும் அடித்தட்டு மக்களை இப்படி மேலும் வாட்டி வதைத்திடும் செயலில் அதிமுக அரசு ஈடுபடுவது கொடுமையானது – கொடூர சிந்தனை கொண்டதுமாகும். ஆகவே “விரைவு பேருந்துகளாக” மாற்றப்பட்டுள்ள 766 சென்னை மாநகரப் பேருந்துகளையும் உடனடியாக சாதாரணப் பேருந்துகளாக மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும், பேருந்து கட்டண உயர்வை கைவிட விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். கட்டண உயர்வை கைவிடவில்லையென்றால், ஜனநாயக ரீதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *