நிகழ்களம்: பிரச்சாரத்தில் நடிகர், நடிகைகள் படும்பாடு!

public

தேர்தல் களத்தில் திரைக்கலைஞர்கள்

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் வெளுத்து வாங்குகிறார்கள். மேக் அப் கலையாமல் கேரவானில் இருந்த திரை நட்சத்திரங்கள்கூட இப்போது வியர்வை சொட்டச் சொட்ட, “பெரியோர்களே தாய்மார்களே” என்றபடி மக்கள் முன்பு வந்து நிற்கிறார்கள் வேட்பாளர்களாக! அவர்களில் சிலரைப் பற்றி இங்கே பார்ப்போம்.

**கனகாம்பரம் சூடிய ரோஜா!**

ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ரோஜா. முகத்தில் துளியும் மேக் அப் இல்லாமல் கருப்பு ரோஜாவாக இருக்கிறார். நகரியில் வீடும் கட்டிவிட்டார். புதிய வீட்டிலிருந்துதான் தினமும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். தினமும் காலையிலும் மாலையிலும் கட்சி நிர்வாகிகளை வீட்டுக்கு வரச் சொல்லி ஆலோசனை நடத்திவிட்டுதான் பிரச்சாரத்துக்கு புறப்படுகிறார். ரோஜாவுக்கு முன்பும் எந்த காரும் செல்வதில்லை. ஸ்கார்பியோ காரில் ரோஜாவும் அவரது உதவியாளரும் மட்டுமே இருக்கிறார்கள். ரோஜா பிரச்சாரம் செய்யும் இடத்தில் மட்டும் திறந்த வெளி ஜீப் தயாராக இருக்கிறது.

எந்தக் கிராமத்தில் ரோஜா நுழைந்தாலும் அந்த ஊரில் யாராவது ஒரு பெண் ரோஜாவுக்கு கனகாம்பரம் பூ கொடுக்க அதை வாங்கித் தலையில் வைத்துக்கொள்கிறார். கனகாம்பரம் பூதான் ஆந்திரா ஸ்பெஷல். எல்லாக் கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடுவை வெளுத்து வாங்குகிறார். ரோஜா செல்லும் இடங்களில் முன்கூட்டியே சென்று கூட்டம் இருக்கிறதா என்பதை கவனித்துவிட்டு, அவர் அங்கே வரும் முன்பாக அடுத்த பாயிண்ட்டுக்குப் புறப்பட்டுவிடுகிறார் ரோஜாவின் ராஜா ஆர்.கே.செல்வமணி. நகரி தொகுதியில் செல்வமணி சமுதாயத்தைச் சேர்ந்த முதலியார் ஓட்டுகள் அதிகம் இருப்பதால் அவரும் மனைவிக்காகத் தனியாக ஓட்டு கேட்டுப் போகிறார். நகரியை மீண்டும் ரோஜா தக்கவைத்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

**பெங்களூருவில் செல்லம்!**

“மறக்காம விசிலுக்கு ஓட்டுப் போட்டுடு செல்லம்…” எனத் தமிழர்கள் உள்ள பகுதியில் தமிழில் பேசியே ஓட்டு கேட்கிறார் பெங்களூரு மத்திய தொகுதி சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ்ராஜ். மோடிக்கு எதிராகக் கடந்த 5 மாதங்களாகவே பெங்களூருவில் தொடர் பிரச்சாரம் செய்துவருகிறார். ஒயிட் ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ் அணிந்து, காலை 8 மணிக்குக் கிளம்பிவிடுகிறார் பிரகாஷ் ராஜ். பெங்களூரு மத்திய தொகுதியில் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி பேசும் மக்கள் இருக்கிறார்கள். எந்தப் பகுதியில் யார் இருக்கிறார்களோ அந்த மொழியில் பேசி ஓட்டு கேட்கிறார் பிரகாஷ்ராஜ்.

“இனி ஒருதடவை மோடி வந்தா இந்த நாடு தாங்காது செல்லம்… என்னை டெல்லிக்கு அனுப்புங்க. உங்களுக்காக நான் பேசுறேன். எல்லாத்தையும் மாத்திக் காட்டுவோம்” என்பதுதான் பிரகாஷ்ராஜின் பிரச்சாரம்.

காலையில் தொடங்கினால் இரவு 10 மணி வரை தெருத் தெருவாக நடக்கிறார் பிரகாஷ் ராஜ். வயதான பாட்டிகளைப் பார்த்தால் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் அவர்களோடு நெருங்கிப் பேசுகிறார். சமூக வலைதளங்களில் பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவு அமோகமாக இருப்பதால், தினமும் புதுசு புதுசாகக் கல்லூரி மாணவ மாணவிகள் பிரச்சாரத்துக்காக பிரகாஷ்ராஜுடன் இணைகிறார்கள்.

செல்லம் கணிசமான வாக்குகளை வாங்குவார்!

**மன்சூர் என்டர்டைன்மென்ட்!**

தமிழ்நாட்டில் திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான். நிலக்கோட்டை பக்கத்தில்தான் இவரது சொந்த ஊர். அதனால் மண்ணின் மைந்தன் என்ற அடையாளத்துடன் களமிறங்கியிருக்கிறார் மன்சூர். தொகுதியில் வாக்கு சேகரிக்கப் போகும் இடங்களில் பரோட்டா போடுவது, வடை சுடுவது, வெங்காய வியாபராம், காய்கறி வியாபாரம், சட்னி அரைத்துக் கொடுப்பது என வித விதமான வேலைகளைச் செய்து ஓட்டு கேட்கிறார்.

மன்சூர் வருகிறார் என்றாலே ஏரியா கலகலப்பாகிவிடுகிறது. கூட்டமும் வருகிறது. மன்சூர் செய்யும் வேலைகளைப் பார்த்து ஜோராகக் கையும் தட்டுகிறது. மன்சூரின் பிரச்சாரத்திலும் அதிகமாக மோடி அட்டாக்தான். “இப்படியே போய்ட்டு இருந்தா உங்க ஊரையே வித்துடுவாங்க. உங்க வீடே உங்களுக்கு சொந்தமா இருக்காது. அதனால எனக்கு ஓட்டுப் போடுங்க. மோடிக்கு ஓட்டு போட்டால் உங்க கதி அவ்வளவுதான். உங்களை யாராலும் காப்பாத்த முடியாது. அப்புறம் உங்க இஷ்டம். .. சினிமாவுலதான் நான் வில்லன். ஆனால் மோடி நிஜ வில்லன். மறந்துடாதீங்க…” என்று பேசுகிறார்.

கூட வரும் ஆட்களையும் சில சமயம் மைக்கிலேயே திட்டுகிறார். அதையும் கூட்டம் ரசிக்கிறது. “நீங்க வருவீங்க… கை தட்டுவீங்க… ஆனால் ஓட்டு மட்டும் போட மாட்டீங்க. எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஓட்டு போடலைன்னா நஷ்டம் உங்களுக்குதான்” என யதார்த்தமாகப் பேசுகிறார். அதை ஆமோதிப்பதுபோல மக்கள் அதற்கும் கை தட்டுகிறார்கள். சில இடங்களில் கேப்டன் பிரபாகரன் படத்தின் டயலாக்கைப் பேசச் சொல்லி மக்கள் கேட்கிறார்கள். அதையும் செய்கிறார் மன்சூர்.

மொத்தத்தில் மன்சூர் பிரச்சாரம் திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு செம என்டர்டைன்மென்ட் ஆக இருக்கிறது!

**சிவகங்கையில் கேட்கும் சினேகன் பாட்டு!**

சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்துக்கும் எச்.ராஜாவுக்கும் மத்தியில் வலம் வருகிறார் பாடலாசிரியரான கவிஞர் சினேகன். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர். “என்கிட்ட செலவு பண்ண காசு இல்லை. ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது. என்னை நம்பி ஓட்டுப் போடுங்க. உங்களுக்கு நான் நல்லது செய்வேன். எங்க அப்பா, தாத்தா யாரும் அரசியலில் இல்லை. எம்.பி. இல்லை. எம்.எல்.ஏ. இல்லை. நான் முதல் தலைமுறை. உங்களை மட்டும் நம்பித்தான் இங்கே வந்திருக்கேன்..” என்பதைத்தான் போகும் இடங்களில் எல்லாம் சொல்கிறார்.

சென்னையிலிருந்து சினிமா உதவி இயக்குனர்கள் சிலரும் சிவகங்கை பகுதியில் தங்கி சினேகனுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்து சினேகனுக்காக ஸ்பெஷல் பாட்டு ஒன்றைப் பாடிக் கொடுத்திருக்கிறார். அதுதான் பிரச்சாரங்களில் எல்லாம் ஒலிக்கிறது.

மதிய நேரத்தில்கூட ஓய்வெடுக்காமல் ஓடுகிறார் சினேகன். ஆனால், கார்த்தியோ, ராஜாவோ சினேகனைப் பொருட்படுத்தவே இல்லை.

**கமல் எக்ஸ்பிரஸ்!**

தன் வேட்பாளர்களுக்காகத் தமிழ்நாடு முழுக்க சுற்றி வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன். 39 தொகுதியிலும் நான்தான் வேட்பாளர் என்றுதான் ஆரம்பிக்கிறார் கமல். எந்த ஊரில் இருந்தாலும் காலை 7 மணிக்குத் தயாராகிவிடுகிறார். மதியம் 1 மணி வரை வேனில் இருந்தபடியே ஒவ்வொரு பாயிண்ட்டிலும் பேசுகிறார். டார்ச் அடித்து ஓட்டு கேட்கிறார். எந்த ஊரில் இருக்கிறாரோ அந்த ஊரில் ஒரு மணியிலிருந்து 3 மணி வரை ரெஸ்ட் எடுக்கிறார். திரும்பவும் 3 மணிக்கு ஆரம்பித்தால் 10 மணி வரை கமல் எக்ஸ்பிரஸ் நிற்பது இல்லை. ஒரு நாளைக்கு சராசரியாக 400 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறார் ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்.

எப்போதும் பளபளப்பாக இருக்கும் கமல், வெயிலில் சுற்றிக் கறுத்த கமல் ஆகிவிட்டார். யாரையும் பேரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்யாமல், கிசு கிசு போலவே பேசுறார். “நான் சொல்றது உங்களுக்குப் புரியும். அவங்க பெயரைச் சொல்லவே தேவை இல்லை” என்கிறார்.

கமல் பாதுகாப்புக்காக பவுன்ஸர்ஸ் 6 பேர் அவர் செல்லும் காருக்கு முன்பாகச் செல்கிறார்கள். அவர்கள்தான் கமலைச் சுற்றி நிற்கிறார்கள். கமலுடன் செல்ஃபி எடுக்க மட்டும் அவர்கள் அனுமதிப்பதில்லை. அந்தந்த ஊரின் எல்லையில் மட்டும் லோக்கல் நிர்வாகிகள் வந்து நின்று கமலை வரவேற்று அழைத்துப் போகிறார்கள். மற்றபடி கமலுடன் இரண்டு கார்கள் மட்டுமே போகின்றன.

திரையில் பார்த்தவர்களை நேரில் பார்க்க மக்கள் கூடுகிறார்கள். ஆனால் ஓட்டு போடுவார்களா?

**- மின்னம்பலம் டீம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *