திருச்செந்தூர்: கடலுக்குள் கருப்புக்கொடி போராட்டம்!

public

அனல்மின் நிலையத்துக்காகக் கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடலுக்குள் இறங்கி கருப்புக்கொடி போராட்டம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைக்கப்படும் அனல்மின்நிலையத்துக்காக, கப்பலில் நிலக்கரியைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலக்கரியை நேரடியாகக் கப்பலில் கொண்டுவந்து இறக்கும் வகையில், கல்லாமொழி பகுதியில் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதோடு, அங்கு நிலக்கரி இறங்குதளம் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 8 கி.மீ. தூரத்துக்குத் திட்டமிட்ட பாலப் பணிகளில் ஒன்றரை கி.மீ. தூரத்துக்குப் பணிகள் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்பட்டால், சுற்றுவட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் அரிப்பு ஏற்படுமென்றும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்றும் திருச்செந்தூர் வட்டார மீனவர்கள் எதிர்க்குரல் எழுப்பினர். அங்குள்ள ஆலந்தலை பகுதிக்குள் கடல்நீர் புகுந்துவிடும் அபாயம் ஏற்படுமென்ற அச்சத்தில் உள்ளனர் மக்கள். எனவே இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று கூறி, சில நாட்களுக்கு முன்னர் கடலுக்குள் படகில் சென்று போராட்டம் நடத்தினர். ஆனாலும், அவர்களது கோரிக்கைகள் ஏதும் செவிசாய்க்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 7) அப்பகுதியிலுள்ள மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களது படகுகளில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டன. கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் அமைப்பது மற்றும் கடலுக்குள் பாலம் அமைப்பது ஆகிய இரண்டு திட்டங்களையும் கைவிட வேண்டுமென்று கூறி, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சிலர் கடலுக்குள் இறங்கி கருப்புக்கொடி போராட்டம் மேற்கொண்டனர். அதே நேரத்தில், பெரும்பாலான பெண்கள் கரையில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *