திருச்சி: பயனற்றுக் கிடக்கும் புதிய மார்க்கெட்!

public

திருச்சியில் காந்தி மார்க்கெட்டுக்கு பதிலாக கல்லிக்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் செல்ல மறுப்பதால் புதிய மார்க்கெட் பயனற்றுக் கிடக்கிறது.

திருச்சி மாநகரின் பிரதான அடையாளங்களில் ஒன்று காந்தி மார்க்கெட். சுமார் 150 ஆண்டுகளாக இந்த மார்க்கெட் இயங்கி வருகிறது. காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்கள் என நூற்றுக்கணக்கான லாரிகளில் சரக்குகள் கொண்டுவரப்பட்டு மொத்த வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாநகரில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, மாநகராட்சியிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கல்லிக்குடி என்ற புறநகர்ப் பகுதியில் புதிய சந்தை கட்ட 2014ஆம் ஆண்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, ஒருங்கிணைந்த காய்கறிகள் மொத்த விற்பனைச் சந்தையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 300 கடைகளைக் கொண்ட இந்தப் புதிய சந்தை கட்டி முடிக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. ஆனால் இன்றுவரையிலும் இந்தப் புதிய மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் செல்ல மறுக்கின்றனர். காந்தி மார்க்கெட்டை காலி செய்ய வியாபாரிகள் மறுப்பதற்கு பல்வேறு காரணங்களை அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் காய்கறிகள் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “புதிய சந்தையில் 300 கடைகள் மட்டும்தான் உள்ளன. அது எங்களுக்குப் போதாது. அவ்வளவு தொலைவுக்கு வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்று நாங்கள் எண்ணுகிறோம்” என்றார்.

திருச்சியில் அதிக விபத்துகளை ஏற்படுத்தும் பகுதியாகவும், கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் பகுதியாகவும் கல்லிக்குடி புதிய மார்க்கெட் பகுதி இருப்பதாகக் கூறி, பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் செல்ல மறுப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதே மனநிலையில்தான் மொத்த வியாபாரிகளும் இருப்பதால் கல்லிக்குடி ஒருங்கிணைந்த காய்கறிகள் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டு 6 மாத காலமாகியும் பயனற்று முடங்கிக் கிடக்கிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *