தற்காலிக ஓட்டுனர்கள் தேவை : அமைச்சர் விஜயபாஸ்கர்

public

அரசு பேருந்துகளை இயக்குவதற்கு தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தேவை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை, மற்றும் பணப் பலன்களை வழங்கக்கோரி மே 15 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிவடைந்ததால் மே 14ஆம் தேதி மாலையே போக்குவரத்து ஊழியர்கள் தங்களுடைய போராட்டத்தை துவங்கினர். இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒவ்வொரு பேருந்து நிலையமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தியாகராய நகரில் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கூறுகையில்,’ தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் அரசு பேருந்துகளை இயக்க தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பேருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் உரிமச் சான்றுகளுடன், அந்தந்த பகுதிகளிலுள்ள போக்குவரத்து அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். ஓட்டுனர் தேர்வின்போது திறமையான ஓட்டுனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது 75 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 100 சதவிகிதம் வரை பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . பயணிகள் சிரமமின்றி பயணிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சென்னை பகுதியில் பேருந்துகளுக்கு மாற்றாக கூடுதல் மின்சார ரயில்களும், தென்னக ரயில்வே சார்பில் 5 வழித்தடங்களில் கூடுதல் ரயில்களும் இயக்கப்படும். மேலும் ஒரு வார காலத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 40 சதவிகித கட்டணச் சலுகையுடன் பயணிக்கலாம்.

மேலும், தொழிற்சங்கங்களுடன் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். போராட்டத்தை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவையுங்கள், அதற்குள் முதல்வரிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி விடுகிறோம் என்றோம்.ஆனால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு 750 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வழங்க ஏற்பாடு செய்து அரசாணையும் வெளியிட்டுள்ளோம். மேலும் 500 கோடி ரூபாய் தரவும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *