ஜெ. நினைவு நாள்: அதிமுக, அமமுக ஒரே நேரத்தில் ஊர்வலம்!

public

ஜெயலலிதா நினைவு தினமான டிசம்பர் 5ஆம் தேதி அதிமுக சார்பில் ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமமுகவும் அஞ்சலி செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனளிக்காமல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைந்து இரண்டு வருடம் முடிந்துவிட்ட நிலையில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் வரும் 5ஆம் தேதி நினைவு ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் நேற்று (நவம்பர் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜெயலலிதாவின் நினைவு நாளான 05.12.2018 அன்று காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையிலிருந்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 26ஆம் தேதி அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5ம் தேதியன்று, கட்சியின் அவைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து மௌன ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க உள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இரு கட்சியினரும் அஞ்சலி செலுத்துவதற்கு இடையே அரை மணி நேரம்தான் இடைவெளி இருப்பதால், ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, பன்னீர் தரப்பினர் அஞ்சலி செலுத்திச் சென்ற பிறகு தினகரன் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *