சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று (டிசம்பர் 28) இடிக்கப்பட்டது.
அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் மிகப்பெரிய கல்விக் குழுமப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கிழக்குப் பகுதியில்தான் நித்யானந்தாவின் ஆசிரமம் அமைக்க இடம் கொடுத்திருந்தது பள்ளி நிர்வாகம்.
இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மகள்கள் இப்போது நித்யானந்தாவின் கஸ்டடியில் இருப்பதாக ஜனார்த்தன சர்மா என்பவர் கொடுத்த போலீஸ் புகாருக்குப் பிறகுதான் இங்கே பள்ளி வளாகத்தில் நித்தி ஆசிரமம் இருப்பதே பரவலாகத் தெரியவந்தது.
ஜனார்த்தன சர்மாவின் புகாருக்குப் பிறகு ஆசிரமத்தில் ரெய்டு நடத்திய குஜராத் அரசு அதிகாரிகள் அங்கிருந்த இரு மேலாளர்களைக் கைது செய்தனர், மற்றவர்கள் எல்லாம் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினார்கள். கைது செய்யப்பட்ட ப்ரண்பிரியா, ப்ரியாதத்வா ஆகியோர் இப்போது சிறையில் இருந்து ஜாமீனுக்காக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகம் எப்படி இடம் கொடுத்தது என்பது பற்றி அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக்காக பெருமளவிலான நிலம் பயன்படுத்தப்படும்போது அதில் 40% நிலத்தை நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு வழங்க வேண்டும். இந்த விதிகளிலும் உரிய நடைமுறைகள் பள்ளி நிர்வாகத்தால் பின்பற்றப்படவில்லை. அந்த இடத்தைதான் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்குக் கொடுத்துவிட்டது பள்ளி நிர்வாகம். ஜனார்த்தன சர்மாவின் புகார்களுக்குப் பிறகுதான் அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்குத் தெரியவந்தன.
இதையடுத்து, பள்ளி அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தபோது அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட கட்டிடங்கள் தவிர வேறு கட்டிடங்கள் இருக்கக் கூடாது. அவற்றை பள்ளி நிர்வாகமே இடித்துவிட்டு, அந்த இடத்தை நகர மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று நகர மேம்பாட்டு ஆணையர் கோர் உத்தரவிட்டார்.
இதையடுத்து டெல்லி பப்ளிக் ஸ்கூல் நிர்வாகமே நேற்று முதல் நித்யானந்தா ஆசிரமத்தை இடிக்கத் தொடங்கியிருக்கிறது.
மத்திய அரசின் உத்தரவால் நித்யானந்தா வெளிநாட்டில் இருந்து விரைவில் இந்தியா கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் நிலையில், அதற்கான முதல் அறிகுறியாக பாஜக ஆளும் குஜராத்தில் நித்யானந்த ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது.
�,