சென்னை: முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசனை!

public

சென்னையில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த முன்னேற்பாடு கூட்டம் கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 31) நடைபெற்றது.

ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு கூட்டம் கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2015ஆம் ஆண்டு நடைபெற்றபோது 10,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு ரூ.2,40,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. கடந்த முறை கலந்துகொண்ட வெளிநாட்டுத் தொழில்முனைவோர்களை விட இந்த முறை இரண்டு மடங்கு அதிகமாகக் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைவோர்களுக்கு ஏற்ற சாதகமான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.

இதனிடையே நேற்று திருவாரூரில் சிறு குறு தொழில் முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “சர்வதேச தொழில்முனைவோர்கள் மாநாட்டில் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10,000 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என்ற இலக்கோடு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தொழில் முதலீடுகளை வரவேற்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது” என்றார். இந்தக் கருத்தரங்கில் 201 முதலீட்டாளர்களிடமிருந்து 120 கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் அதைப்பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “பிளாஸ்டிக் பொருட்களைத் தயார் செய்யும் சிறு நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை அணுகினால் அவர்களுக்கான மாற்று உதவிகள் அளிக்கப்படும். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சிகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக இயற்கைப் பொருட்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் சிறந்து விளங்கும். இயற்கைப் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு அரசு உரிய முன்னுரிமை வழங்கும்” என்றார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *