சிறப்புக் கட்டுரை: தெருவிளக்கில் படித்து இனி நீதிபதி ஆக முடியாது!

public

சேது ராமலிங்கம்

‘தெருவிளக்கில் படித்து ராமசாமி நீதிபதியானார்; என்று நான் படித்த பள்ளியின் ஆசிரியா் கூறி, மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவார். அப்போது மாணவர்களாகிய நாங்கள் அவரைக் கிண்டலடிப்போம். ஆனால் சில காலம் கழித்து அதை உண்மை என அறிந்தபோது அந்த அற்புதமான ஆசிரியா்களும் இல்லை; கல்வி முறையும் மாறியிருந்தது.

எனக்குத் தெரிந்து ஒரு விறகு வெட்டியின் மகள் மாநிலத்திலேயே அதிகம் மதிப்பெண் பெற்று டாக்டராக முடிந்தது. எம்ஜிஆர், சிவாஜி காலத்துப் படங்களிலும் நாயகர்கள் குடிசைகளிலும் தெருவிளக்குகளிலும் படித்து டாக்டரோ அல்லது வழக்கறிஞரோ ஆகியிருப்பார்கள். நடைமுறையிலும் அது சாத்தியமாகியிருந்தது. காமராஜர்களாலும் கல்விக் கொடை வள்ளல்களாலும் உருவாக்கப்பட்ட கல்வியின் பொற்காலமாக அது தொடர்ந்தது.

அண்மைக் காலம்வரை அந்தப் போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இரவில் புரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்தவர் மாநிலத்தில் முதலிடம், ஆட்டோ டிரைவரின் மகள் முதலிடம் என்றெல்லாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகக்கூட செய்திகள் வந்துகொண்டிருந்தன. நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் எங்கும் யாரும் நாட்டின் எந்த மூலையிலிருந்தும் உயர்கல்வி பயில முடிந்தது. இனிமேல் இதில் எதுவுமே சாத்தியம் ஆகாத நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆம் இனி இவை அனைத்தும் வெறும் வரலாறாக மட்டுமே மாறிவிடக்கூடும்.

**தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட கல்வி**

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கல்வியானது தனியாருக்குத் திறந்து விடப்பட்டது. அப்போது சில கல்வித் தந்தைகளின் ஆதிக்கத்தில்தான் கல்வி நிறுவனங்கள் இருந்தன. உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், கல்வியைப் படிப்படியாக கார்ப்பரேட்டுகள் கைப்பற்றி வருகின்றன. உயர்கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் வசம் சென்றுகொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற பொதுக்கல்வி நிறுவனங்களுக்கும் நிதியைக் குறைப்பது, ஆசிரியர்களை நியமிக்க மறுப்பது உள்ளிட்ட நெருக்கடிகளைக் கொடுத்து அவற்றையும் தனியார்மயமாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இச்சூழலில் கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஊடுருவலும் நடந்துகொண்டிருக்கிறது. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது. அதிலும் முக்கியமாக மதவாத அரசியலுக்கு எதிராக அணி திரளக் கூடாது என்பதற்காக ஜேஎன்யூ தொடங்கி மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் எனத் தொடர்ந்து அவற்றில் ஊடுருவது; அவை பணிய மறுத்தால் அவற்றை ஒடுக்குவது ஆகிய முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

**ஜனநாயகத்துக்கான இடம் குறித்த பொது விசாரணை**

இந்த நிலையில், புது டெல்லியில் இந்தியாவில் ஜனநாயகத்துக்கான இடம் குறைந்துவருவது குறித்த மக்களின் ஆணையம் பொது விசாரணை ஒன்றை நடத்தியது. கல்வி நிறுவனங்களின் மீதான தாக்குதல்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பொது விசாரணைக்குப் பேராசிரியரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான ரொமிலா தாப்பர் தலைமை தாங்கினார்.

பொது விசாரணையின் நீதிபதிகளாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ், நீதிபதி கோல்சே பாட்டில், பேராசிரியர் அமித் பாதுரி, முனைவர் உமா சக்ரவர்த்தி, பேராசிரியர் டி.கே.ஓமன், பேராசிரியர் வசந்தி தேவி, பேராசிரியர் ஞான்சியாம், பேராசிரியா் மேஹர் இன்ஜினீயர், பேராசிரியர் கல்பனா கண்ணபிரான், பமிலா பிலிப்போஸ் ஆகியோர் பங்கேற்றனர்

இந்தப் பொது விசாரணையில், 17 மாநிலங்களிலுள்ள 50 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்தும் 120 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். இவர்களிடமிருந்து 49 வாக்குமூலங்களும் 17 கல்வி நிபுணர்களின் கருத்துகளும் பெறப்பட்டன. இந்த வாக்குமூலங்களின் தொகுப்பின் அடிப்படையில் நீதிபதிகளின் அவதானிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

உயர்கல்வியே இந்திய ஜனநாயகம் பிழைத்திருப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது என்பதையே நீதிபதிகள் தம் தீர்ப்பில் மையக் கருத்தாகத் கூறியுள்ளனர்.

கல்வி நிலையங்களில்தான் சுதந்திரமாகச் சிந்திக்கவும் ஆராயவும் விவாதிக்கவும் கருத்து மாறுபடவும் சுதந்திரம் உண்டு. அதற்கான வெளியாக அது கண்டிப்பாகத் திகழ்ந்தாக வேண்டும். உயர்கல்வி நிலையங்களின் கதவுகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும், குறிப்பாக விளிம்பு நிலையிலுள்ள மாணவர்களுக்கும் திறந்தே இருக்க வேண்டும். கடந்த நான்காண்டுகளில் இந்நிறுவனங்களில் கடுமையான நெருக்கடிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உயர்கல்வியை ஒடுக்கப்படும் சமூகத்தினருக்கு ஏன் அளிக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. ஏற்கெனவே படித்துவரும் ஒடுக்கப்படும் மாணவர்களுக்கு நெருக்கடிகள் அளி்த்து வெளியேற்றுகின்றனா் அல்லது அவர்கள் மீது சாதியப் பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலையும் செய்துகொள்கின்றனர். ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலாக்களின் சோக சரிதங்கள் இன்னும் ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

**ஓரங்கட்டப்படும் விளிம்பு நிலை மக்கள்**

சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பொதுக்கல்வி நிறுவனங்களுக்குச் சுயாட்சி அதிகாரம் வழங்குவதாக முடிவெடுத்திருப்பதே ஏழை மற்றும் விளிம்பு நிலையிலுள்ள மாணவர்களை ஓரத்திற்குத் தள்ளும் நடவடிக்கைதான். அவர்களுக்குக் கல்வியில் சமத்துவத்தையும் தரத்தையும் மறுக்கும் நடவடிக்கை இது. அவர்களால் செலுத்த முடியாத அளவுக்குக் கல்விக் கட்டணத்தை உயர்த்துவது இதற்கான ஆதாரம்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சுயாட்சி வழங்குவது என்ற பெயரில் சந்தைக்குச் சாதகமான புதிய பட்டப் படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகளையும் தொடங்குவதும் நடைபெறுகிறது. தற்போது தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் போன்றோர் கல்லூரிகளில் செலுத்த முடியாத அளவு கட்டணங்கள் பல லட்சங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதலில் அவர்கள் வைக்கும் நுழைவுத் தேர்வுகளால் மருத்துவக் கல்வியில் இவர்களால் காலடிகூட எடுத்து வைக்க முடியாது. அனிதாவின் உயிரைப் பறித்த நீட்டை ஒருவேளை அவர்கள் எதிர்கொண்டாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதை நினைத்தே பார்க்க முடியாது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அதிகாரபூர்வ கட்டணமே ஆண்டுக்கு ரூ.15 லட்சமாகும். அதேபோன்று மற்ற தொழிற்கல்லுாரிகளிலும் நுழைவுத் தேர்வுகளின் தரங்களையும் கட்டணங்களையும் உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

அரசு கொண்டுவந்த உலகமயமாக்கல் கொள்கைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சியாளர்கள் அனைத்து நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் தந்திரமாக முதலில் அவற்றின் தரத்தைச் சீர்குலைக்கின்றனர். போதுமான தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. உதாரணமாக, மத்தியப் பிரதேசத்திலும் டெல்லியிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் 5,000 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது கல்வியின் தரத்தைப் பாதிக்கிறது. அரசு கல்விக்காக மிகக் குறைவான நிதியையே செலவழிக்கிறது. இந்த நடவடிக்கைகள் தனியார்மயமாக்குவதற்கான பாதையாகும்.

கல்விக்கு நிதி அளிக்க வேண்டும் என்ற அரசியல் சட்டத்திலுள்ள பொறுப்பை அரசு தட்டிக்கழித்து வருகிறது. உயர் கல்வியானது தனியார்மயமாக்கப்படுவதோடு நிற்பதில்லை. அது கார்ப்பரேட்மயமாகவும் ஆக்கப்படுகிறது. இது நாட்டிலுள்ள கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும்.

தனியார்மயமாக்கலுடன் காவிமயமாக்கலும் நடந்து வருகிறது. உள்ளூரிலுள்ள கல்வி நிலையங்களில் தொடங்கி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆர்எஸ்எஸ் தனது இருப்பை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது. உதாரணமாக அசாமில் 500 பள்ளிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. சங்கர் தேபோ சிசு நிகேதன் என்ற பெயரில் நடந்துவந்த பள்ளிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இப்பள்ளிகளில் 1.6 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனா். ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட சங்கர் தேபோவின் சமய சார்பின்மைக் கொள்கை நீக்கப்பட்டு அதில் இந்துத்துவக் கொள்கை திணிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

ராமானுஜம் எழுதிய 3,000 ராமாயணங்களைப் பற்றிய கட்டுரை பாடத் திட்டத்திலிருந்தே நீக்கப்பட்டுவிட்டது. டெல்லியின் சமஸ்கிருதத் துறையானது ஆரியர்கள் இந்தியாவின் பூர்விக குடிமக்கள் என்பதை நிறுவுவதற்காக வரலாற்றை ‘ஆய்வு’ செய்துவருகிறது.

பல்கலைக்கழகங்களில் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களைத் தனிமைப்படுத்துவதும் பாகுபாடு காட்டுவதும் அதிகரித்துவருகிறது.

மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிவருவதும் அதிகரித்துவருகிறது. ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் மாணவிகளைப் பார்ப்பது, பிற்போக்கான ஆணாதிக்கக் கலாச்சாரத்தைப் பின்பற்றும்படி மாணவ மாணவிகளைக் கட்டாயப்படுத்துவது ஆகியவை தொடர்ந்து நடைபெறுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் விடுதியில் இரவு படிக்க விரும்பிய மாணவிகளை, பெண்கள் இரவில் படிப்பது இயற்கைக்கு மாறானது என்று துணைவேந்தர் கண்டித்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.

காஷ்மீர் மாணவர்களை தேச துரோகிகளாகவும் பாகிஸ்தான் ஏஜென்டாகவும் அணுகுவது நடைமுறையில் உள்ளது. அவர்கள் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களிலிருந்து படிக்கும் மாணவர்களையும் வெறுப்புணர்வுடன் பார்ப்பதும் வளர்ந்துவரும் அபாயகரமான போக்காகும்.

மொத்த கல்விமுறையையும் காவிமயமாக்குவது, வரலாற்றைத் திருத்தி வகுப்புவாதமயமாக்குவது போன்றவை சமூகம் முழுமையையும் பாசிசமயமாக்கும் போக்கிற்கே இட்டுச்செல்லும். அபாயகரமான இப்போக்குகளை எதிர்த்து நிற்கும் சக்திகளின் வலிமையைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *