சிறப்புக் கட்டுரை: சர்ச்சின் குரலா, சாத்தானின் குரலா? – சரவணன் சந்திரன்

public

தினகரன் விஷயத்திலிருந்து வேறொன்றைப் புரிந்துகொள்ளப் பிரியப்படுகிறேன். நல்லவன் / கெட்டவன், கறுப்பு / வெள்ளை என்னும் கோட்டுக்கு இடையிலான விளையாட்டைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடலாம். வேற்று மாநிலத்தவர் ஒருவர் வெளியிலிருந்து தமிழக அரசியலைப் பார்ப்பதுபோலப் பார்க்கலாம். என் தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புகளைத் தாண்டிப் புரிந்துகொள்ள முயல்கிறேன். என் தனிப்பட்ட விருப்பங்கள் வேறாக இருக்கலாம். கறுப்புக்கும் வெள்ளைக்கும் நடுவே நமக்கே தெரியாத ஏராளமான நிறங்கள் இருக்கின்றன என்பதால் வழக்கமான கண்ணோட்டத்தைத் தவிர்த்துவிட்டு தினகரனை அணுகலாம்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, சட்டத்தையும் தார்மீகத்தையும் போட்டுக் குழப்பி, தன் வசதிக்கேற்ப தமிழ்ப் பொதுச் சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. முடிந்தவரை தார்மிகம். முடியாதபோது சட்டம். ஒட்டுமொத்த கூட்டு மனசாட்சிக்கு முன்னால் சட்டங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லைதானே? இந்தக் கூட்டு மனசாட்சி சட்டங்களைப் போட்டுத் தூக்கிக் காலில் போட்டு மிதித்தாவது அது குறிவைத்தவனைப் போட்டுப் பல நேரங்களில் தாக்கியிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதற்காகத்தானே தூக்கி அவரை உள்ளே போட்டார்கள்.

இந்தப் பின்புலத்தில்தான் தினகரனின் விவகாரத்தை அணுக வேண்டியிருக்கிறது. சசிகலா குடும்பத்தில் சற்றேறக்குறைய எல்லோரையும் சந்தித்திருக்கிறேன். அல்லது சந்தித்தவர்களுடன் இருந்திருக்கிறேன் என்பதால் நெருக்கமான கதைகள் எனக்குக் கொஞ்சம் தெரியும். என் ஆரம்ப காலப் பத்திரிகைப் பணியின்போது தினகரனையும் பார்த்திருக்கிறேன். மேரியட் ஹோட்டலில் ரூம் போட்டு நாகரிமாக கட்டிங் வாங்கியவர்களையும் தெரியும். பெரம்பலூரில் ஒருத்தர், போகும்போது வீட்டுக்கு ஒரு லாரி செங்கல் அனுப்பி வெச்சுருங்க என்று சொல்லிவிட்டுப் போனதும் தெரியும். அண்ணன் வண்டிக்கு டீசல் அடிச்சு விடச் சொன்னார் என்று தலையைச் சொறிந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். ஒரு முழு மது பாட்டிலுக்காக நாள் முழுவதும் காத்திருப்பவர்களையும் காண முடியும். எதற்காகச் சொல்கிறேன் என்றால், எல்லாத் தட்டிலும் அவர்கள் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்திலும் ஒரு ரூபாய் அரிசியும் இருக்கிறது. நயம் பொன்னி அரிசியும் இருக்கிறது. அவர்களுக்குத் தோதான அளவுகளில் கட்டிப் போட்டுக்கொண்டார்கள். அதனாலேயே அவர்கள் மன்னார்குடி கம்பெனிக்காரர்கள் என அறியவும் பட்டார்கள். இப்படிப் பொத்தாம் பொதுவாகச் சொல்வது குறித்து அந்த ஊர்க்காரர்கள் ஏற்கெனவே கோபித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் கும்பினிக்காரர்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

இந்த பெரிய ஆலமரத்தில் தினகரன் மட்டும் உண்மையிலேயே இப்போது கொஞ்சம் தனித்துத் தெரிய ஆரம்பித்திருக்கிறார். சூட்சுமமான முறையில் காய் நகர்த்தி அரசியல் செய்யத் தெரிந்தவர் தினகரன். யாரிடம், எப்போது, எப்படிப் பேச வேண்டும் என்பதும் தெரிந்தவர். அந்த சூட்சுமம்தான் அவரை இந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அரசியலின் மையத்தில் நிற்கும் அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் அரசியல் தரகர்கள் என எவ்வளவு காலம்தான் குற்றம் சாட்டப் போகிறோம்? களத்தில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன?

நமது தராசுகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு யதார்த்தமாகப் பார்த்தால், தினகரன் அடுத்த கட்டத்துக்குத் தன்னை நகர்த்திக்கொண்டுவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. அந்தக் குடும்பத்திலேயே ஜெயலலிதாவால் முதலில் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இந்திய அரசியலமைப்பு வழங்கும் பதவிகளை அனுபவித்தவரும்கூட.

ஆரம்ப காலகட்டத்தில் அவரைப் பார்த்தபோது அந்தக் குடும்பத்துக்கே உரிய கல்யாணக் குணங்கள் அவரிடமும் இருந்தன. இப்போதுகூட இருக்கலாம்; யார் கண்டது? ஆனால், அவர் பொதுவெளியில் இப்போது காட்டும் சித்திரம் அவரது பழைய சித்திரத்துக்கு நேரெதிரானது. அவரைக் கூர்ந்து பார்த்தவர்களுக்கு அது நன்றாகப் புரியும். வழக்கறிஞர் ஜோதியிடம் பலான வார்த்தைகளால் வம்பு வளர்த்தவர்தான். ஆனால், அதற்காகவா அறியப்படுகிறார் இப்போது? இத்தனை களேபரங்களையும் மீறி இருபத்து சொச்சம் பேரை அவரால் எப்படித் தன் பின்னால் அணிவகுக்க வைக்க முடிகிறது? காசு என்று உடனடியாக முடிவுக்கு வந்துவிடக் கூடாது. உண்மையில் தினகரனை எதிர்த்து அரசியல் செய்பவர்களும் தினகரனுக்கு நிகராகவே காசு வைத்திருக்கிறார்கள். அதைக் காப்பாற்றுவதற்காகத்தான் மேலான அரசியல் சக்திகளிடம் பம்முகிறார்கள் என்கிற கோணமும் இருக்கத்தான் செய்கிறது.

இன்று ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் என்ன பேரம் பேசப்படும் என்பது நமக்குத் தெரியும். பேரங்களை மீறி அவருடன் நிற்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் ஒரு நம்பிக்கையூட்டும் செயல் இல்லாமல் இருக்கவே இருக்காது. கொலைகாரர் என்று நீங்கள் ஓங்கி யார் மீதாவது முத்திரை குத்தினால்கூட அவரோடு இணைந்து நிற்க ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள். தினகரனின் ஆதரவாளர்கள் அவரைத் தகுதியானவராகத்தான் பார்க்கிறார்கள். தினகரன் அரசியல் ஓய்வில் இருந்தபோதும் அவர் கட்சிக்காரர்களுடன் தொடர்பில்தான் இருந்தார். இப்போது அவர் வெளிப்படையாகக் காட்டும் முகம் தேர்ந்த அரசியல்வாதியின் வியூகத் திறனைக் காட்டும் முகம்.

அவர் எதற்கும் அஞ்சுகிற மாதிரி காட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் எல்லோருக்கும் அச்சம் இருக்கத்தானே செய்கிறது? அச்சமற்றவர் எனக் காட்டப்படும் ஜெயலலிதாவுக்கு அச்சம் இருந்தது இல்லையா? பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் தினகரன் நிதானம் தவறாமல் பேசும் பாங்கு பிடித்திருப்பதாகப் போகிற இடங்களில் நிறையப் பேர் சொல்கிறார்கள். கட்சியில் ஒரு பிரிவினர் அவரோடு நின்று குரலெழுப்புகிற காட்சிக்கு மட்டும் நாம் ஏன் கண்ணை மூடிக்கொள்கிறோம்?

அவர் சாதூர்யமாக அரசியல் காய்களை நகர்த்தவும் தெரிந்திருக்கிறார். அவரைப் பிடித்து உள்ளே போட்டார்கள். வெளியே வந்து நின்று பேசினார் இல்லையா? திறமையில்லாத ஒருத்தரை அரசராகப் போட்டால்கூட நாற்காலியைக் கோட்டை விடுவார். திறமையான ஒருத்தரை ஜெயிலில் போட்டால்கூட திமிறிக்கொண்டு எழுந்து வந்து விடுவார் ஓ.பி.எஸ்ஸுக்கு மத்திய அரசு அவ்வளவு வாய்ப்புகளைக் கொடுத்தபோதுகூட அவரால் பெரும்பான்மையைப் பிய்த்துக்கொண்டு வர முடியவில்லையே?

நடப்பதை ஓர் ஆட்டம் என்றே வைத்துக்கொள்வோம். அதில் ஒரு கண்ணுக்கு வெண்ணெயையும் இன்னொரு கண்ணுக்கு விளக்கெண்ணெயையும் வைக்கும் போக்கு தவறில்லையா? தார்மிகம்தான் நமக்கு முக்கியம் என்றால், களத்தில் நிற்பவர்களில் யாரிடம் அது இருக்கிறது?

“பத்துப் பேரைக் கூட வைத்திருந்த ஓ.பி.எஸ். வெளியே வரும்போது கைதட்டி ஆராவரம் செய்தீர்கள். இப்போது நாங்கள் இருபது பேர் வந்திருக்கும்போது ஏன் சப்போர்ட் செய்ய மறுக்கிறீர்கள்?” என அவருடைய ஆட்கள் கேட்பதைக் கூர்ந்து கவனியுங்கள். கறை படிந்தவர்கள் அவர்கள் என்று சொல்லலாம். ஆனால், இந்த ஆட்டத்தை ஆடும் பிறர்மீது கறை இல்லையா? ஆடுபவர்கள், ஆட்டுவிப்பவர்கள் என எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். அவர்களுக்குச் சட்ட ரீதியான வாய்ப்பு தர வேண்டிய இடங்களில் தார்மிகம் பேசுகிறார்கள். தார்மிகம் பேச வேண்டிய இடங்களில் சட்டம் பேசுகிறார்கள்.

பொதுவாகவே எழவு வீட்டில் மட்டும் அரசியல் செய்யக் கூடாது என்பார்கள். கல்யாண வீட்டில்கூட அடித்துக்கொள்வார்கள். எழவு வீட்டில் வெட்டிக்கொண்டவர்கள், குத்திக்கொண்டவர்கள்கூட அமைதியாகத் தங்களது கைகளை உறவினர்களின் உள்ளங்கைகளில் பதிப்பார்கள். ஆனால், இங்கே எழவு வீட்டில்தான் நியாயமே இல்லாத அரசியலைச் செய்கிறார்கள். மக்களின் நலனுக்காக என்று சொல்வதையெல்லம் சந்திர மண்டலத்தில் இருந்து இறங்கி வருபவர்கள்கூட நம்ப மாட்டார்கள். அதையும் மீறித் தகுதியுடையதாக இருப்பது தப்பி முளைத்து வருவதை வரலாறு நெடுகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

தன்னை வேறொரு வகையில் மாற்றிக்கொண்டுவந்து இப்போது நம் முன்னால் நிற்கிறார் தினகரன். அவர் அறத்தின் பக்கம் நிற்கவில்லை. ஒட்டுமொத்த கூட்டு மனசாட்சியும் அறம் என்று வடிவமைத்ததன் பக்கம் அவர் நிற்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் சர்ச்சின் குரலாக அறியப்படவில்லை. சாத்தானின் குரலாக அறியப்படுகிறார். எது சர்ச்சினுடையது, எது சாத்தானுடையது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், எல்லாத் தரப்புகளின் சார்பிலும் நேர்மையற்ற முறையில் ஆடப்படும் ஆட்டம் இது. அவர்கள் சிங்கங்களோ, குரங்குகளோ… எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். கூண்டைத் திறந்துவிடுங்கள். தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கட்டும். அறம் என்ன என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும். அறமற்றவர்கள் சேர்ந்து அறத்தைத் தீர்மானிக்கக் கூடாது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகட்டும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *