சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு இல்லை: அமைச்சர்

public

ஸ்டெர்லைட் ஆலையை இனி எப்போதும் திறப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட அண்மையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில், இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமான வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டதோடு, ஆலை இயங்குவதற்கும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அசோக் நகரில் இன்று (ஜூலை 6) செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரை மூடுவதற்கு அரசு அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் ஆலை இழுத்து மூடப்பட்டது. எதிர்காலத்திலும் சரி எந்தக் காலத்திலும் சரி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியதே திமுகதான் எனக் குற்றம் சாட்டிய அவர், “ எட்டுவழிச் சாலை திட்டம் குறித்தோ அதன் பயன்பாடு குறித்தோ தெரியாமல் எதிர்க்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. இதுதான் எங்களின் கருத்தும்” என்று தெரிவித்தார்.

முட்டைக்கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாகவே வருமான வரிச் சோதனை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த, அவர், “வருமான வரித்துறை என்பது தன்னிச்சையான அமைப்பு. அவர்கள் சோதனை நடத்துவதற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை. முட்டைக்கொள்முதலில் முறைகேடு நடப்பதாகக் கூறுவதையும் ஏற்க முடியாது. வரி ஏய்ப்பு தொடர்பாகவே சோதனை நடைபெறுகிறது. எனவே, இதற்கும் மாநில அரசுக்கும் தொடர்புப்படுத்தக் கூடாது என்று பதிலளித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *