கொடநாடு காவலாளி கொலை வழக்கு: விசாரணையில் பின்னடைவு!

public

கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி கொலை வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்காததால் போலீஸாரின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் தேதி அதிகாலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் தனியார் காவலர் ஓம் பகதூர் தூக்கிலிடப்பட்ட நிலையில் பிணமாகவும், மற்றொரு காவலர் கிருஷ்ண பகதூர் கை வெட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடனும் கிடந்தனர். இந்தச் சம்பவம் குறித்த கோத்தகிரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெட்டப்பட்டு கிடந்த காவலர் கிருஷ்ண பகதூரை கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொலை சம்பவம் குறித்து ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கொலை தொடர்பாக எந்தவிதமான சிறு துப்பும் கிடைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி போலீஸார் நடத்திய விசாரணையில் கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்த சம்பவ இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு புதருக்குள் கையுறைகளும், கார் நம்பர் பிளேட்டுகளும் கிடந்ததை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதைக்கொண்டு விசாரணையை நகர்த்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரும் கிருஷ்ண பகதூரின் செல்போனும், இறந்துபோன ஓம் பகதூரின் செல்போனும் இதுவரை கிடைக்காததால் போலீஸ் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிகலாவின் நெருங்கிய உறவினர் ராவணன் கடந்த அதிமுக ஆட்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டவர். பிறகு பிணையில் வந்த அவர் கொடநாடு பகுதியிலுள்ள சுமார் 650 ஏக்கர் இடத்தை வாங்கியுள்ளார். எப்படியோ இந்த செய்தியைத் தெரிந்துகொண்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அந்த இடங்களை ராவணனிடமிருந்து எழுதி வாங்கிவிட்டார். எனவே இந்தக் கொலை குறித்து ராவணனின் மீதும் காவல்துறையினர் தங்களது சந்தேகப் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

ராவணனிடமிருந்து ஜெயலலிதா இடத்தை எழுதி வாங்கிய செய்தியை நாம் ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் 1 மணி பதிப்பிலேயே [வெளியிட்டிருந்தோம்](https://www.minnambalam.com/k/2017/04/25/1493104489) என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *