^காயும் முதல்வர் மாவட்டப் பயிர்கள்!

public

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் அதேநேரம், அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களிலிருந்து பக்கவாட்டு மாவட்டங்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும். இந்தக் கால்வாய்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 40,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் கால்வாயில் தண்ணீர் திறப்பது கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டதால், இந்த மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான எடப்பாடி, அமைச்சர் தங்கமணியின் தொகுதியான திருச்செங்கோடு, அமைச்சர் கருப்பண்ணன் தொகுதியான பவானி ஆகிய தொகுதிகள் உட்பட்ட மூன்று மாவட்ட மக்களும் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய விவசாயிகள், “மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் கால்வாய் பாசனத்தை நம்பி மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் இருக்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதன்முறையாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் மேற்குக் கால்வாய் மூலம் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. கிழக்குக் கால்வாய் மூலம் ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயன் அடைகிறார்கள். இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி நிறுத்தப்பட்ட தண்ணீர், அதன்பின் திறக்கப்படவே இல்லை. இதனால் முதலில் உயிர் தண்ணீர் கிடைத்த நிம்மதியில் நாற்று விட்டோம். இன்று நாற்றுகள் எல்லாம் கருகிக்கொண்டிருக்கின்றன. இதுபற்றி முதல்வரிடம் முறையிட பலமுறை முயன்றும் முடியவில்லை. அதிகாரிகள் இந்த விவகாரத்தை முதல்வரிடம் எடுத்துச் செல்லவே இல்லை.

இந்த விஷயம் மின்னம்பலம் மூலமாக முதல்வருக்குச் சென்று அவர், இப்போது மீதமிருக்கும் தண்ணீரையாவது கால்வாய்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டால் நல்லது. ஏனென்றால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் இதுவரை பெய்த மழையளவு குறைந்து வருவதால், முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்” என்கிறார்கள்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 3,599 கன அடியாக வந்துகொண்டிருந்த நீர்வரத்து, திங்கட்கிழமை நொடிக்கு 3,148 கன அடியாகக் குறைந்துவிட்டது. இதேபோன்று தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடுவது பற்றி இப்போதைக்கு முடிவெடுக்க முடியாது. இதுபற்றி முதல்வரிடம் தெரிவிக்க மேலதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

தன் மாவட்டம் உட்பட மூன்று மாவட்ட விவசாயிகளின் பிரச்னை தீர முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பாரா?�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *