&கடலும் மகனும்!

public

சரவணன் சந்திரன்

நேரடியாய் அனுபவித்தவர்களின் வலிகள் உக்கிரத்துடன் பதிவாகிக்கொண்டிருக்கும் வேளையில், எட்டி நின்று பார்த்தவனுடைய மனநிலையில் எதுவும் எழுதிவிடக் கூடாதெனப் பொறுமையாகக் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். மனம் உண்மையிலேயே பதற்றமாக இருந்தது. ஏனெனில் நான் கரையில் இருப்பவன் என்றாலும் நானும் கடலின் மகன்தான். என் நண்பர்கள் பலர் கடலோடிகள். அவர்கள் வழியாகவே நான் கடல் சார்ந்த தொழிலுக்கும் வந்தேன். அந்த அடிப்படையில் கரையிலிருந்து கடலைப் பார்த்தவன் என்கிற முறையில் அழுத்தமாக ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய விழைகிறேன்.

**கடவுளைப் போன்றது கடலும்**

இந்த நிமிடத்தில் அறுநூறு பேர் வரை கடலில் இருந்து மீளவில்லை. மீள்வார்களா? தெரியவில்லை. மீள வேண்டும் என வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கடலிடம் இறைஞ்சுவதும் கடவுளிடம் கையேந்துவதும் ஒன்றுதான். கடவுளைப் போலவே கடலும் யாரும் அடிமுடி அறிய முடியாத புதிர். ஒருமுறை தைமூர் கடலில் நீர்மட்டம் குறைந்திருந்தபோது காலார உள்பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். தரை தெரிந்தது. சில நட்சத்திர மீன்கள் தெரிந்தன. ஒரு பாறை மீன் சாவகாசமாக என்னைக் கடந்து போனது. அடுத்த எட்டு எடுத்து வைக்கும்போது மணல் புதைகுழியைப் போலச் சரிந்தது. என் காலுக்குக் கீழே சராலென ஒரு பாதாளம் விரிந்தது. செங்குத்தான ஆழம் அது.

வெளியே வந்த பிறகே உள்ளூர் மீனவர்கள் அப்படியொரு அச்சுறுத்தும் பாதாளம் இருப்பதாகச் சொன்னார்கள். அதுவரை அவர்களும்கூடப் பார்த்ததில்லை என்றார்கள். அவர்களே அதுவரை அறியாத பாதாளம் அது.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், தெரிந்த மீனவர்களைக்கூடக் கடல் பல நேரங்களில் இழுத்துச் சாய்த்து விடும். அதையும் மீறி எதற்காக கடல் பாடு பார்க்கப் போகிறார்கள்? தினம்தோறும் சாலை விபத்துகளில் மனிதர்கள் மரித்தபடி இருக்கிறார்கள் என்றபோதிலும் பயணங்கள் தொடர்வதில்லையா? அதைப் போலத்தான் இதுவும். ஆபத்திருந்தாலும் தெரிந்த சாலைகளில் மட்டுமே மனிதர்கள் பயணம் செய்கிறார்கள்.

எதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன் என்றால் கரையில் இருப்பவர்கள் கடலைப் புரிந்துகொள்வது குறித்த சித்திரம் மங்கலானது. கொஞ்சம் அசட்டுத்தனமானதும்கூட. “சும்மா போட்டெடுத்துப் போறாங்க. ப்ரீயா கெடைக்குது மீனு. அள்ளிட்டு வந்து கொள்ளை விலைக்கு விக்கறாங்க” என்கிற குரல்களை நிறையக் கேட்டிருக்கிறேன். படகுக்கடியில் பாளம் பாளமாகத் தங்கச் சவரன்களைப் பொதித்து வைத்திருப்பதாகவும் ஒரு புரிதல் இருக்கிறது.

**கரைக்கு உறைக்காத கடலின் யதார்த்தம்**

அங்கும் கரையில் இருப்பதைப் போலவே வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையைச் சொல்கிறேன் கரையிலாவது பரந்த பசுமைகள் உண்டு. ஆனால் கடல்புரத்தில்தான் உப்பரிந்த வறுமை அதிகம். எண்ணிக்கையில் கரையைவிடக் கடல் இந்த விஷயத்தில் பலவீனமானது. இரவும் பகலும் தொழில் நடப்பதால் உள்ளடங்கிய வாழ்வில் உழலும் மீனவர்களின் யதார்த்தம் பெரும்பாலும் கரைக்கு உறைப்பதில்லை. அவர்களும் குறுங் குழுக்களின் நிமித்தமாகப் பிரிந்து கிடப்பதால் உரத்துச் சொல்வதுமில்லை.

கரையைப் பொறுத்தவரை வாரம் ஒருநாள் மீன் சாப்பிடுவதோடு கடலுக்கும் அவர்களுக்குமான உறவு முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள். திருச்செந்தூரில் மொட்டை போடப் போனால் மட்டுமே கடலைப் பார்ப்பவர்களும் உண்டு. அதைத் தாண்டி அங்கு நிலப் பகுதிகளைக் காட்டிலும் இயற்கையால் வலிந்து பெறப்படும் துயர்கள் குறித்த அறியாமை கரையில் அழுத்தமாக உறைந்து கிடக்கிறது. அறுநூறு பேர் காணாமல் போன நிலையிலும் கரைச் சமூகம் அதைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் உச்ச நட்சத்திரத்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறது என்றால் அதற்குப் பின்னால் இருக்கிற உளவியல் இதுதான்.

எந்தத் தொழிலில் பிரச்சினை இல்லை எனலாம். உண்மைதான். ஆனால் இது வெறும் தொழில் மட்டுமல்ல. ஓகி புயலால் எங்கள் பகுதிகளிலும் பாதிப்புகள் உண்டு. விளைந்த சோளத் தட்டைகள் காற்றில் ஒடிந்து சாய்ந்துவிட்டன. ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் என விவசாயி ஒருத்தர் மனதொடிந்து பேசினார். இன்னொரு பக்கம் குலைகுலையாய் வாழைகள் பூவெடுத்த நிலையில் சரிந்துவிட்டன. ஆனால் எங்கேயும் உயிர்ச் சேதம் இல்லை. உயிர் மீண்டால் எதையும் மீட்டெடுத்து விடலாம்.

**கடல் ஒரு குப்பைத் தொட்டியா?**

ஆனால் அந்த உயிரையே தினம்தோறும் பணயம் வைப்பதாலேயே கடல் தொழில் முக்கியமானதாக ஆகிறது. இவர்களை யார் ஆழ்கடல் பகுதிகளுக்குப் போகச் சொல்வது? ஒரு தடவை காசிமேட்டிலிருந்து நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து போட்டெடுத்துப் போய்விட்டு, வரும் போது மூவாயிரம் பெருமதியுள்ள மீன்களோடு மட்டுமே திரும்பி வந்தோம். உள்ளே வலையில் மீன்களைக் காட்டிலும் குளிர்பான தகரப் பாட்டில்களே கிடந்தன. இந்தக் குப்பைகளை யார் அங்கே அனுப்பி வைத்தது?

திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர் ஒருத்தரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சாயக் கழிவுகளை பைப் வழியாகக் கடலில் கொண்டு போய்ச் சேர்க்க அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அடுத்தவன் வீட்டு டாய்லெட் தண்ணீரை உங்கள் நடுவீட்டில் கொண்டுவந்து விட ஒத்துக்கொள்வீர்களா என்றதும் வாயடைத்து விட்டார். அவரைப் பொறுத்தவரை கடல் ஒரு குப்பைத் தொட்டி. அந்தக் குப்பையில் வளங்களும் இருக்கின்றன. அதை இலவசமாக எடுத்து விற்கும் ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மீனைத் தவிர எங்களுக்கு வேறெதையும் அறிய வேண்டியதில்லை. இதுதான் பொதுச் சமூகத்தின் மனநிலை.

ஆறாயிரம் கிலோமீட்டர் தூரம் நெட்டுக்காக, கரையோரமாகவே உள்ளடங்கி வாழும் அந்தச் சமூகம் தேர்தல் வெற்றிகளைத் தீர்மானிக்கும் இடத்திலும் இல்லை என்பது அதன் ஆண்டாண்டு காலத் துயரம்தான். இதே நேரம் கரையில் ஒரே இடத்தில் அறுநூறு பேருடைய உயிர்கள் ஊசலாட்டம் எனச் செய்தி வந்தால் யோசித்துப் பாருங்கள். ஒட்டுமொத்த உலகமும் அங்கே குவிந்திருக்கும். இங்கே குவியாததற்கு என்ன காரணம்? இங்கே தமிழகம் பிளவுபட்டுக் கிடக்கிறது. விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என எல்லாத் தட்டுக்களும் தனித்தனியாகப் போராடிக்கொள்ள வேண்டும். ஒருவர் போராட்டத்தில் இன்னொருவர் கலந்துகொள்ள மாட்டார்கள். இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் காசிமேட்டில் இருப்பவர்களே கலந்து கொள்ளவில்லை என்கிற நிலையில் மற்றவர்களைச் சொல்வானேன்?

இதையெல்லாம் விடுங்கள். சாவுகள் பலவிதம். ஆனால் இருப்பதிலேயே கொடூரமானது, நுரையீரலில் நீர் சொட்டுச் சொட்டாக இறங்கி ஜல சமாதி ஆவதுதான். அதுதான் இப்போது நாம் கரையில் கால் மட்டுமே நனைத்து விளையாடும் கடலின் ஆழத்தில் நடந்துகொண்டிருக்கிறது. எல்லா அம்சங்களிலும் கடல் எப்போதும் கரையின் பார்வையிலிருந்து உள்ளடங்கியிருக்கிறது. என்னளவில் கரையில் இருக்கும் கடல் மகனாய் துயரத்தைச் சுமந்தலைகிறேன். கரைச் சமூகத்தின் பார்வை அவர்கள் மீது பதிய வேண்டுமென அடியாழத்தில் இருந்து விரும்புகிறேன்.

கடல்புரத்தில் இரவெல்லாம் சின்னப் புள்ளை மூச்சுச் சத்தம் கேட்டது என்பார்கள். மேற்புறத்தில் எழும்பி வரும் கடலோடிகளின் நண்பனான திமிங்கலத்தின் மூச்சு சத்தத்தையே அப்படிச் சொல்வார்கள். சின்னப் புள்ளைகளின் மகன்களின் மூச்சடங்கிய சத்தம் இப்போது உரத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. அதைக் கேட்டபடி கடல் என்கிற திமிங்கலம் அரற்றுகிற சத்தம் யாருக்காவது கேட்கிறதா?

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர். மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். பயணமும் வேளாண்மையும் இவரது செயல்பாடுகளின் மையம். தொடர்புக்கு: saravanamcc@yahoo.com)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *