ஒரே நாடகத்தில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் – தேவிபாரதி

public

சினிமா பாரடைசோ – 6

ஏறத்தாழ இருபது வருடங்களுக்குப் பிறகு திருமண வீடொன்றில் பேத்தாஸ் சண்முகத்தைச் சந்தித்தேன். பேத்தாஸ் சண்முகம் என அவரை ஒருவர் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்குச் சில மாதங்களுக்கு முன் மொடக்குறிச்சி அல்-அமீன்-பாலிடெக்னிக்கில் பாதம் அமைப்பின் சார்பில் நான் ஒருங்கிணைத்து நடத்திய கொங்கு மண்டலக் கூத்துக்கலைப் பயிலரங்கு பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் தான் கோலோச்சிக்கொண்டிருந்த, அப்போது நலிந்து போயிருந்த மேடை நாடகக் கலைக்கு நான் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு என்னைச் சந்திப்பதற்கு விரும்பியிருந்தார் பேத்தாஸ் சண்முகம்.

நாலு முழ வேட்டியும் சட்டையும் உடுத்திய மெலிந்த உருவம். நரையோடிய சிகையும் தாடியும். பற்களில் புகையிலைக் கரை. அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்தபோது பல வருடங்களுக்கு முன்பு சென்னிமலையில் மேடையேற்றப்பட்ட திருவிழா நாடகமொன்றில் எம்.ஜி.ஆரின் உரிமைக் குரல் படத்தில் இடம்பெற்றிருந்த ‘விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே’ பாடலுக்கு அந்த நாடகத்தின் நாயகனான பேத்தாஸ் சண்முகம் மஞ்சுளாவுடன் டூயட் பாடிய காட்சி மனதில் தோன்றியது. அந்த நாடகத்தின் நாயகி பெயரும் மஞ்சுளாதான். சேலம் மஞ்சுளா. புகழ் பெற்ற நாடகத் தாரகை, ரசிகர்களின் கனவுக்கன்னி. பேத்தாஸ் சண்முகத்தின் நாடகங்களில் மஞ்சுளாதான் நாயகி.

குறைந்தபட்சம் மூன்று டூயட் காட்சிகளையாவது வைத்துவிடுவார் பேத்தாஸ் சண்முகம். கதை, வசனம், இயக்கம் முதலான தயாரிப்போடு சம்பந்தப்பட்ட எல்லாப் பொறுப்புகளையும் அவரேதான் மேற்கொள்வார். அவரது நாடகங்களுக்கு அவர்தான் நாயகன். டூயட் காட்சிகளுக்கான அரங்க வடிவமைப்பில் அவர் பல ஆச்சரியங்களை நிகழ்த்திக்காட்டுவார். திரைச்சீலைகளில் மான்கள் துள்ளித் திரியும். நீரோடைகள் பெருகும். நாயகனும் நாயகியும் நீரில் கைகளை அலைந்துகொண்டே பாடல்களுக்கு வாயசைப்பார்கள்.

நாடகத்தின் பிற்பகுதி சோகமயமாக இருக்கும்படி கதையை அமைத்திருப்பார். நாயகன் வாழ்வில் நொடித்துப் போயிருப்பார். சகோதர சகோதரிகளால் வஞ்சிக்கப்பட்டிருப்பார். நண்பர்களின் துரோகங்களுக்கு இரையாகியிருப்பார். அப்போதெல்லாம் பேத்தாஸ் சண்முகம் கதறி அழுவார், சிரித்துக்கொண்டே கடந்து செல்வார். தனது நாடகங்களின் முற்பகுதியை எம்.ஜி.ஆர் படங்களின் பாணியிலும் பிற்பகுதியை சிவாஜி படங்களின் பாணியிலும் அமைத்திருப்பார். அவரது வில்லன்கள் எம்.ஆர்.ராதாவைப் போல் சூழ்ச்சியும் தந்திரமும் நிரம்பியவர்களாக இருப்பார்கள்.

திருமண விழாவில் பேத்தாஸ் சண்முகத்தைப் பார்த்தபோது அவர் தன் நாடகங்களில் பிற்பகுதியில் தோன்றும் நாயகனின் சாயலைக் கொண்டிருந்தார். ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் வரை நாடகமே வாழ்க்கை எனக் கொண்டிருந்தவருக்கு அவற்றை இழந்த ஒரு வாழ்க்கையை ஏற்க மனமில்லாமல் போயிருக்க வேண்டும்.

அப்போது 1990களில், திருவிழாக்களில் நாடகங்களுக்கு இருந்த இடம் காணாமல் போயிருந்தது. திரைப்படக் காட்சிகளும் பாட்டுக் கச்சேரிகளும் ஆடலும் பாடலும் போன்ற கவர்ச்சிகரமான நடன நிகழ்ச்சிகளும் செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின் நாடகங்கள் தம் செல்வாக்கை இழக்கத் தொடங்கின.

கிராமத்தின் எம்.ஜி.ஆர்கள். சிவாஜிகள், ஜெய்சங்கர்கள், அசோகன்கள், நம்பியார்கள், நாகேஷ்கள், ரங்காராவ்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். பேத்தாஸ் சண்முகத்துக்குப் போலவே அவர்களுக்கும் நாடகம் வாழ்வின் முக்கியமான பகுதியாக மாறியிருந்தது. அவர்கள் வருடத்தின் பாதியை அதற்காக அர்ப்பணித்தார்கள். பணம் திரட்டினார்கள், துணை நாயகனாகவோ, வில்லனாகவோ, நாயகியின் தந்தையாகவோ நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்காக அலைந்தார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே நடிகர்கள் தேர்வு நடக்கும். நடிகனாக வேண்டுமென்றால் வெறும் திறமை மட்டும் போதாது, நாடகச் செலவுகளுக்குப் பணம்கொடுக்கிற அளவுக்குக் கையில் காசு புரளவும் வேண்டும். கதாநாயகனாக நடிப்பதற்கு இவ்வளவு, வில்லனாக நடிப்பதற்கு இவ்வளவு, நகைச்சுவை நடிகனாக நடிப்பதற்கு இவ்வளவு என்று ஒவ்வொருவருக்கும் அவர் ஏற்கும் பாத்திரத்துக்குத் தகுந்தாற்போல் ஒரு விலை உண்டு. இயக்குநரோ, நாடக மன்றச் செயலாளரோ நிர்ணயித்த பணத்தைக் கொடுத்துவிட்டு வசனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாயகன், வில்லன் பாத்திரங்களுக்கு அடுத்தபடியாக அதிக விலை போகும் பாத்திரம் நாயகியின் தந்தை பாத்திரம். நாயகன் பாத்திரத்தைவிட வில்லன் பாத்திரத்தைப் பெறுவதற்கே போட்டி அதிகம். வில்லனுக்குத்தான் காபரே பார்ப்பதற்கும் கதாநாயகியை வல்லுறவு செய்யவும் வாய்ப்புக் கிடைக்கும். என்ன விலை கொடுத்தாவது அந்தப் பாத்திரத்தைப் பெற்றுக்கொள்ளப் போட்டி போடுவார்கள்.

வில்லனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவமுள்ள பாத்திரம் கதாநாயகியின் அப்பா பாத்திரம். ஏழைக் கதாநாயகியின் ஏழை அப்பா. பாதி நாடகத்தில் எலும்புருக்கி நோய் தாக்கிச் செத்துப்போய்விடுவார். அதற்கு முன்னால் ‘இப்படி அநாதையாக விட்டுவிட்டுப் போகிறேனே’ என்று கதாநாயகியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுவார். வில்லன், கதாநாயகனை அடுத்து நடிகைகளைக் கட்டிப்பிடிக்கும் பாக்கியம் கொண்ட இந்த அப்பா நடிகர்களும் கணிசமான தொகை கொடுக்க வேண்டியிருக்கும்.

நடிகர்கள் வயல்வெளிகளிலும் நெசவுக்கூடங்களிலும் பால் பண்ணைகளிலும் உட்கார்ந்துகொண்டு தத்தம் வேலையினூடாக அவற்றை மனப்பாடம் செய்யும் அழகு இருக்கிறதே, அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

சித்தோட்டில் தவமணி என்ற ‘புகழ்’பெற்ற ஒரு நாடகக்காரர் இருந்தார். அந்தப் பக்கத்தின் திருவிழா நாடக இயக்குநர்களிடையே முடிசூடா மன்னராக விளங்கியவர். ‘சித்தோட்டு மாப்பிள்ளை’ என்று ஒரு நாடகம் போட்டதால் அவரை அந்தப் பட்டப் பெயரிலேயே அழைத்தார்கள். அப்போதைய வெற்றிப்பட இயக்குநரான கே.பாக்யராஜின் பாதிப்புக்குள்ளானவர். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் முருங்கைக் காய் பேசப்பட்டது போலவே அவருடைய நாடகத்தில் ‘புடலங்காய்’ சமாச்சாரம் ஒன்று பெரிதாகப் பேசப்பட்டது. அவரது நாடகங்கள் எல்லாவற்றிலும் அவர்தான் கதாநாயகனாகவும் நடிப்பார்.

திருவிழா நாடக இயக்குநர்களாய் இருந்தவர்கள் சிலர் பின்னாட்களில் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்திருந்தமையால் தவமணியும் ஒருநாள் திரைப்பட இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்ததால் அவரது நாடகங்களில் நடிக்க இளைஞர்கள் போட்டி போட்டார்கள். அவரைச் சுற்றி எப்போதும் ஓர் இளைஞர் பட்டாளம் வட்டமடித்துக் கொண்டிருக்கும். அவர் எந்த வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார்கள்.

தவமணி தனது நாடகங்களில் நடிக்கும் நபர்களுக்கு நாடகத்தைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார். யாரும் தனக்குப் போட்டியாக வந்துவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு இருந்தது. பொதுவாக எல்லா நாடகக்காரர்களுக்கும் இருக்கிற பயம்தான் அது. நாடகப் பிரதிகளை முழுமையாய் யாருக்கும் காண்பிக்க மாட்டார். சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் பேச வேண்டிய வசனப் பகுதிகளை மட்டும் தட்டச்சு செய்து கொடுப்பார். அதில் வசனங்களோடு பாத்திரங்களின் பாவனைகள், செய்கைகள் பற்றிய குறிப்புகளும் விரிவாக இடம்பெற்றிருக்கும்.

நாடகப் பிரதிகள் இப்படித்தான் இருக்கும்.

அப்பொழுது கதவு தட்டப்பட்டது. தனபால் எழுந்து சென்று கதவைத் திறக்கிறான். ரதி சிரித்தபடி உள்ளே வருகிறாள்.

ரதி: (தனபாலைப் பார்த்து) உங்க. . . . . . . . . . . . . . .முடியும்.

தன: (சிரிக்கிறான்) ஹ… ஹ… ஹா…

தனபாலுக்கு ரதி என்ன வசனம் பேசுவாள் என்பது தெரியாது. அவளுடைய வசனம் ‘உங்க’ என்று தொடங்கி ‘முடியும்’ என்பதில் முற்றுப்பெறும். தனபால் அவள் எப்பொழுது அந்த வார்த்தையைச் சொல்வாள் என்று கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருப்பான். அவள் சொன்ன மறு விநாடி தனது பிரதியில் உள்ள குறிப்பில் கண்டுள்ளபடி ‘ஹ ஹ ஹ ஹா’ என்று உரக்கச் சிரிக்க வேண்டும். அதற்குத்தான் இந்தக் குறிப்புகள். பார்ப்பதற்கு மிக எளிதானதாகத் தோற்றமளிக்கும் இச்செயல் உண்மையில் கடினமானது. அனுபவம் இல்லாதபட்சத்தில் பல குழப்பங்களுக்கு இட்டுச்சென்றுவிடும்.

தட்டச்சு இயந்திரத்தில் வடமொழி எழுத்தான ‘ஹ’வைத் தட்டச்சு செய்வதற்கு ‘உ’ வையும் ‘ற’வையும் அடுத்தடுத்து ஒன்றாகத் தட்டச்சு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நடிகரோ புதுமுகம். அவர் அதற்கு முன்பாக நாடகப் பிரதியெதையும் வாசித்திருக்கவில்லையாதலால் தட்டச்சு செய்யப்பட்டிருந்த பிரதியை ஓர் எழுத்து விடாமல் அப்படியே மனப்பாடம் செய்துகொண்டு ஒத்திகைக்கு வந்துவிட்டார். ரதியின் வேடத்திற்குத் தற்காலிகப் பொறுப்பு வகித்த இயக்குநர் அவளுடைய பகுதியைச் சொல்லி முடித்தார். ‘முடியும்’ என்ற இறுதி வார்த்தை காதில் விழுந்ததோ இல்லையோ, தனபால் உரத்த குரலில் ‘சிரிக்கிறான்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து ‘உ ற உ ற உ றா’ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு அவருக்குக் கொடுத்த பிரதியை வாங்கிப் பார்த்தபோதுதான் விஷயமே புரிந்திருக்கிறது. தட்டச்சு இயந்திரத்தில் ‘ஹ’ என்ற வடமொழி எழுத்து இல்லாமல் போனதுதான் இந்தக் கூத்துக்குக் காரணம்.

இப்படிப்பட்ட கூத்துகள் நிறையவே நடப்பதுண்டு.

**முந்தைய கட்டுரை : [கொடுமுடி அரசும், பேத்தாஸ் சண்முகமும்!](https://minnambalam.com/k/2018/12/05/13)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *