ஏழைகளையும், எல்லையையும் காக்க வரி!

public

ஏழைகளையும், இந்திய எல்லைகளையும் காக்க வரியை முழுமையாக வசூலிக்க வேண்டியது அவசியமென்று ஒன்றிய நிதித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நேரடி வரிகளுக்கான மத்திய ஆணையத்தின் சார்பில் ஜனவரி 25ஆம் தேதி டெல்லியில் நடத்தப்பட்ட சர்வதேச சுங்கவரி நாள் நிகழ்வில் ஒன்றிய நிதித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வருமான வரித் துறை அதிகாரிகள் மேலோட்டமாக அல்லாமல் தீவிரமாக பணியாற்ற வேண்டும். தொழில்துறை நிறுவனங்கள் நேர்மையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். நாமெல்லாம் உறுதியாகப் பணியாற்றி வரி வசூல் செய்தால்தான் ஏழைகளுக்கு சேவை செய்ய இயலும். உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலும்.

பாதுகாப்பை மேம்படுத்தி எல்லைகளைக் காக்க இயலும். எந்த வருவாயையும் இழக்கக் கூடாது. நேர்மையாகவும், அறத்துடனும் தொழில் நிறுவனங்கள் செயல்பட வேண்டும். முன்பெல்லாம் வரி விதிப்பும், இறக்குமதி வரியும் மிக அதிகமாக இருந்தது. அதிக அளவிலான மறைமுக வரியும், நேரடி வரியும் மக்களை வாட்டியது. இதனால் வரி செலுத்துவதையே சிலர் தவிர்த்தனர். ஆனால் எல்லா தொழிலதிபர்களும் வரி செலுத்தாமல் ஏமாற்றவில்லை. சில கருப்பு ஆடுகள் இருந்தன. வரி வளையத்தை எளிமையாக்க கடந்த சில ஆண்டுகளாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வரி விதிப்புகளைக் குறைக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே வரி வசூலிப்பதில் ஒவ்வொரு அதிகாரியும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வருமான வரித் துறையில் 80,000 பேர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் அது எஞ்சியுள்ள 79,999 பேரிடம் எதிரொலிக்கும்” என்றார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள நிலையில், தற்காலிக நிதியமைச்சராக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *