எடப்பாடி கொடுக்கும் பணம்: பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு!

public

வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை கடந்த 11 ஆம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அறிவித்த அன்றே இதை வரவேற்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இப்போது அதிமுக கூட்டணியில் பங்குதாரர் ஆகிவிட்டதால், ‘அரசு அறிவித்த இத்திட்டத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க பாமவினர் உதவ வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 21) வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி வழங்கும் திட்டத்திற்கும், மத்திய அரசின் சார்பில் உழவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கும் பயனாளிகளை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், பல இடங்களில் இந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடைய வேண்டியது மிகவும் முக்கியமாகும். இரு திட்டங்களுக்கான பயனாளிகளின் உத்தேசமான பட்டியலை தமிழக அரசு ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கிறது. ஆனாலும், எவரும் விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் புதிய பயனாளிகளும் இப்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த விவரங்கள் பல்வேறு வழிகளில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தரப்பினருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்பதாலும், விண்ணப்பங்களை பெற வேண்டிய அதிகாரிகள் வேறு பணிகள் காரணமாக அலுவலகத்திற்கு வெளியில் சென்று விடுவதாலும் ஏராளமான பயனாளிகளின் விவரங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

மேலும் அவர், “மத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ரூ.2,000 நிதி உதவி பெற கிராம நிர்வாக அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், புகைப்படங்கள், நியாயவிலைக் கடைகள், சிட்டா நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். அதேபோல், மாநில அரசு சார்பில் ஒரு முறை மட்டும் வழங்கப்பட உள்ள ரூ.2000 நிதி உதவி பெற விண்ணப்பப்படிவம் எதுவும் தாக்கல் செய்யத் தேவையில்லை. மாறாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றை ஊராட்சி செயலாளர்களிடம் வழங்கினால் போதுமானதாகும்.

இந்த விவரங்கள் தெரியாததால் பலர் மத்திய, மாநில அரசின் நிதியுதவி பெறுவதற்காக தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் பகுதியிலுள்ள ஏழை, எளிய அமைப்புசாராத் தொழிலாளர்களையும், உழவர்களையும் அணுகி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற விண்ணப்பித்து விட்டார்களா? என்பதை விசாரிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்காத ஏழைகள் மற்றும் உழவர்களுக்கு இத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து விளக்குவதுடன், தேவையான ஆவணங்களைத் திரட்டி அவர்களின் பெயர்களை பதிவு செய்யவும் உதவ வேண்டும்.

இந்தத் திட்டங்களின்படி நிதியுதவி வழங்கும் பணி வரும் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதற்குள்ளாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும், உழவர்களும் 100% இத்திட்டங்களுக்கு விண்ணப்பித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கான இத்திட்டங்களின் பயன்களை தகுதியானவர்களுக்கு பெற்றுத் தருவதில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் ஒருங்கிணைந்து பா.ம.க. நிர்வாகிகள் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *