அரசுப் பள்ளிகளில் இடைநிற்றலை தடுக்க வலியுறுத்தல்!

public

அரசுப் பள்ளிகளில் அதிகரித்துவரும் இடைநிற்றலை தடுக்க புதிய உத்தி தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் இடைநிற்றல் விகிதமும் வேகமாக அதிகரித்து வருகிறது.

மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராமதாஸ் இன்று (அக்டோபர் 14) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அரை விழுக்காடாகவும், இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் ஒரு விழுக்காடாகவும் இருந்து வந்தது. கடந்த ஆண்டில் இதை முறையே 0.1 விழுக்காடாகவும், அரை விழுக்காடாகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது எட்டப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“அதேநேரத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கான இடைநிற்றல் விகிதம் கடந்த ஆண்டில் 0.88 விழுக்காடு ஆகவும், இடைநிலைப் பள்ளிகளுக்கான இடைநிற்றல் விகிதம் 1.12 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட முறையே 8.8 மடங்கும், 2.24 மடங்கும் அதிகமாகும். இது தவிர உயர்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 3.75 சதவிகிதமாகவும், மேல்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 1.69 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது” என்று ராமதாஸ் பட்டியலிட்டுள்ளார்.

“அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ.30 ஆயிரத்துக்கும் கூடுதலாகச் செலவழிக்கப்படுகிறது. இது மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கும் செலவழிக்கப்படும் ரூ.27,150ஐ விட பத்து விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.1967.47 கோடி செலவிடப்படுகிறது. இதுதவிர கல்வி உதவித் தொகை ஆயிரக்கணக்கில் வழங்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக இடைநிற்றலை தடுப்பதற்காக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பத்தாம் வகுப்பில் ரூ.1,500, 11ஆம் வகுப்பில் ரூ.1,500, 12ஆம் வகுப்பில் ரூ.2,000 என ஒவ்வொரு மாணவருக்கும் மொத்தம் ரூ.5,000 சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டது. ஆனாலும், எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இடைநிற்றலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்திகளை வகுக்கக் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அதன் பரிந்துரைகளை நேர்மையாகச் செயல்படுத்துவதன் மூலம் இடைநிற்றலை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *