நீட் ஆய்வுக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை: ஒன்றிய அரசு!

politics

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்தது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 10ஆம் தேதி அமைத்து உத்தரவிட்டது. நீட் தேர்வின் பாதிப்பு குறித்த ஆய்வு செய்யும் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இக்குழுவை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஜூலை 8ஆம் தேதி இதுகுறித்து ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று (ஜூலை) ஒன்றிய சுகாதாரத்துறை சார்பு செயலாளர் சந்தன்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நீட் தேர்வுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் சட்ட அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நீட் தேர்வு நடத்தப்பட்டு தகுதி அடிப்படையில் பொது கலந்தாய்வு மூலமாக மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தொடர்பான சட்டம், விதிகள், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகக் கூற முடியாது. இந்தச் சட்டம் பொது நலனைக் கருத்தில்கொண்டே இயற்றப்பட்டது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பான சட்டங்கள் அமல்படுத்தப்படுவது சிறப்பாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு, தனியாகக் குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நியமனம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணானது.

மாநில அரசு தொடர்பான விஷயங்களில் மட்டுமே விசாரணை ஆணையம் அமைத்துக் கொள்ள, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயலாகும்; தமிழ்நாடு அரசு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யக் குழு நியமிக்க முடியாது. நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து விசாரிக்க, தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு வருகிற 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *