ராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி!

Published On:

| By Balaji

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் போர்க்கொடி உயர்த்தினர். காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தை அவர்கள் புறக்கணித்ததால், தகுதி நீக்க நோட்டீஸை சபாநாயகர் அனுப்பினார்.

சட்டமன்றத்தைக் கூட்டி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று முதல்வர் அனுப்பிய முன்மொழிவை ராஜஸ்தான் ஆளுநர் மூன்று முறை நிராகரித்தார். இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி பிரியங்கா காந்தி மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளால் சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசுக்கே திரும்பினார். இதன் அடுத்த கட்டமாக ஆகஸ்டு 13 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெலாட் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார் பைலட்.

இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) காலை கூடியது. கனமழை பெய்ததன் காரணமாக கூட்டம் பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது முதல்வர் அசோக் கெலாட் தனக்கு 125 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். குரல் வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனையடுத்து, சட்டமன்றம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் அசோக் கெலாட், “முழு மாநிலத்திலும், மகிழ்ச்சியின் அலை உள்ளது. ராஜஸ்தானில் பாஜகவின் சதி தோல்வியடைந்துள்ளது. இது ராஜஸ்தான் மக்களுக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். இப்போது, கொரோனாவுடன் போராட அனைவரும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு இது ஒரு பாடமாக அமையும். அவர்களின் ஒவ்வொரு தந்திரமும் ராஜஸ்தானில் தோல்வியடைந்தது. மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையற்ற நம்பிக்கையும், எங்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமையும் தான் இந்த வெற்றியைக் கொண்டு வந்துள்ளது” என்றும் நன்றி கூறினார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share