பாஜகவால் தீட்டுப்பட்டதாம்: அம்பேத்கர் சிலையை கழுவிய கம்யூனிஸ்டுகள்!

Published On:

| By Balaji

பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, அந்த அம்பேத்கர் சிலை கழுவி சுத்தம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பெகுசராய் தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டிருந்தபோது பிப்ரவரி 14 ஆம் தேதி சாஹேபூர் கமல் என்ற ஊரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்தத் தகவல் அறிந்த லோக்கல் ஆர்ஜேடி மற்றும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் , பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தீண்டியதால் அம்பேத்கர் சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்று சொல்லி பிப்ரவரி 15 ஆம் தேதி அந்த சிலை முன் திரண்டனர். இரு வாளிகளில் தண்ணீரை எடுத்து அம்பேத்கர் சிலையைக் கழுவி விட்டு, ‘ஜெய் பீம்’ ஜெய் பீம்’ என்று முழக்கங்கள் எழுப்பினர். பாஜகவால் தீட்டுப்பட்ட அம்பேத்கர் சிலையை சுத்தப்படுத்திய இந்த நிகழ்வு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் மூலம் வீடியோவாக பரவியது. இந்தியா முழுதும் இது பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் , “பாபாசாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த கிரிராஜ் சிங்குக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆர்.ஜே.டி ஆகியோர் சிலையை சுத்திகரிக்கும் செயல் வெட்கக்கேடானது, இழிவானது. ஆர்.ஜே.டி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் மத்திய அமைச்சரிடம் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்றார்.

இது தொடர்பாக பிகார் மாநில சிபிஐ செயலாளர் சத்யநாராயண சிங் கூறியபோது, “இதுபோன்ற சம்பவத்தில் எங்கள் கட்சி நிர்வாகிகளின் தலையீடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற செயல்களைச் செய்வது பாஜகவின் கலாச்சாரம்.” என்று கூறினார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share