rஅரசியல் மாற்றத்திற்கான 3 திட்டங்கள்: ரஜினி

politics

அரசியல் மாற்றம் தொடர்பாக 3 திட்டங்களை ரஜினிகாந்த் விளக்கியுள்ளார்.

சென்னை லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் இன்று (மார்ச் 12) செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைக் கூறினார். மேலும், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்காக மூன்று திட்டங்களை எடுத்துவைத்தார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “அரசியல் மாற்றத்திற்காக முக்கியமான 3 திட்டங்களை வைத்துள்ளேன். நான் கவனித்ததில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேல் கட்சிப் பதவிகள் உள்ளன. பதவிகளில் உள்ளவர்களின் குடும்பம், உறவினர்கள் மூலம் தேர்தல் நேரத்தில் வாக்குகள் வரலாம். அதனால் தேர்தல் நேரத்தில் பதவிகள் தேவை.தேர்தல் முடிந்தபிறகு அவ்வளவு பதவிகள் தேவையில்லை.

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரால் டெண்டர் உள்பட அனைத்து விஷயங்களிலும் ஊழல் நடைபெறும். மக்களுக்கு திட்டங்கள் சென்று சேராது. சிலர் கட்சிப் பதவிகளை தொழிலாகவே வைத்திருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நேரத்தில் மட்டும் பதவிகளை உருவாக்கிவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு கட்சி நடத்துவதற்கான அத்தியாவசிய பதவிகளை மட்டும் வைத்துக்கொள்வது என முடிவு செய்துள்ளோம். இதுதான் என்னுடைய முதல் திட்டம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “தற்போது சட்டமன்றத்தில் இருப்பவர்கள் 50, 65 வயதுகளுக்கு மேற்பட்டவர்கள்தான். அதற்கு 50 வயதுக்கு கீழானவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பதவிக்கு வருபவர்களே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். புதியவர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. இளைஞர்களுக்கு அவ்வளவு சுலபமாக பதவி கிடைக்காது. பதவி கிடைக்க வேண்டும் என்றால் எம்.எல்.ஏ, எம்.பி அல்லது கோடீஸ்வரரின் மகனாக இருக்க வேண்டும். நான் எனது கட்சியில் 60 சதவிகிதம் வரை 50 வயதுக்கு கீழுள்ளவர்களைத்தான் பதவியில் அமர்த்தப்போகிறேன். மற்ற கட்சியிலிருந்து வரும் நல்லவர்களுக்கு மீதமுள்ள 35-40 சதவிகித பதவிகள் கொடுக்கப்படும். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகளை வீட்டுக்கே சென்று அழைத்து கட்சியில் இணைப்பேன். மின்சாரம் போன்ற புது சக்தி சட்டமன்றத்திற்கு சென்று ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ரஜினிகாந்த் ஒரு பாலமாகவே இருப்பேன்” என்று தனது இரண்டாவது திட்டத்தைச் சொன்னார்.

தனது மூன்றாவது திட்டமாக கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் செயல்படும் என்று தெரிவித்த ரஜினிகாந்த், “நான் முதல்வர் பதவியை நினைத்துக்கூட பார்த்ததில்லை. நல்லவரை அந்த பதவியில் அமர்த்துவேன். நான் கட்சியின் தலைவராக மட்டுமே இருப்பேன்” என்று குறிப்பிட்டார்.

**-எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *