நகர்ப்புறத் தேர்தல் -அறிவிப்புக்குத் தடையில்லை: நீதிமன்றம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்தச் சூழலில் சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு என 32 வார்டுகளும், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப் பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும் ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் பெண்களுக்குக் கூடுதல் வார்டுகள் வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. எனவே வார்டுகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், மூன்றில் ஒரு பகுதிக்குக் குறையாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதால், பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வார்டு எல்லை மறுவரையறை அடிப்படையில் மண்டல வாரியாக சுழற்சி முறையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் மாநிலத் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கை தான் இந்த வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட எவ்வித தடையும் விதிக்கவில்லை” என்று கூறினர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share