எடுபடாத ராஜினாமா அழுத்தம்! வீட்டில் இருந்து புறப்பட்ட ஓபிஎஸ்

politics

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று (செப்டம்பர் 29) ஆம் தேதி ஊரடங்கு தொடர்பான கலெக்டர்கள் கூட்டம், பிற்பகலில் நடைபெற்ற மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டு தனது ஆதரவாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.

28 ஆம்தேதி செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்குமான மோதலின் விளைவாகத்தான் நேற்றைய அரசு நிகழ்வுகளைப் புறக்கணித்தார் பன்னீர். மேலும் நேற்று காலை தனது வீட்டில் இருந்த தனது காரில் இருந்து தேசியக் கொடியையும் கழற்றி வைத்துவிட்டார் ஓ.பன்னீர். இதுபற்றி நேற்றே( செப்டம்பர் 29) மின்னம்பலத்தில் துணை முதல்வர் பதவி ராஜினாமா: பன்னீர் கிளப்பிய புயல் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் நேற்று காலை ஓ.பன்னீரை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி இன்றும் துணை முதல்வரை சந்தித்துப் பேசினார். மேலும் நத்தம் விசுவநாதன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட சிலரும் இன்று பன்னீரை காலையில் சந்தித்தனர் பன்னீர் வீட்டு வாசலில் சுமார் ஐம்பது பேர் கூடி, ‘கொள்கைச் சிகரம் ஓபிஎஸ்… வருங்கால முதல்வர் ஓபிஎஸ்” என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தன்னை சந்திக்க பலரும் வருவார்கள் என்று நினைத்த ஓ.பன்னீரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பலரும் அவரை சந்திக்க வரவில்லை. மேலும் இன்று சென்னை மாநகராட்சியில் நடைபெறும் திடக் கழிவு மேலாண்மை தொடர்பான அரசு விழாவின் அழைப்பிதழில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் தனது ராஜினாமா அழுத்தம் எடுபடும் என்று நினைத்த ஓபிஎஸ்சின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் இருந்து தேசியக் கொடி கட்டப்பட்ட காரில் பன்னீர் செல்வம் புறப்பட்டார். அவர், இன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செல்கிறார் என்று அவரது வீட்டில் ஊடகத்தினரிடம் கூறினார்கள். அப்போது செய்தியாளர்கள் குவிந்து அவரிடம் கேள்விகளைத் தொடுக்க… வணக்கம் மட்டும் வைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.

இதேநேரம் சென்னை மாநகராட்சி நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ பொதுவாக சென்னை மாவட்டத்தில் பிரதான நிகழ்ச்சிகளில்தான் துணை முதல்வர் பெயர் இருக்கும். இது சின்ன நிகழ்ச்சி என்பதால் அவர் பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. இதில் வேறு எதுவும் இல்லை”என்றார். ஆனால், ‘சின்ன நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார், துணை முதல்வர் பங்கேற்கவில்லையே?” என்று செய்தியாளர்கள் கேட்டுக் கொண்டே புறப்பட்டனர்.

** -வேந்தன்**

[துணை முதல்வர் பதவி ராஜினாமா! பன்னீர் கிளப்பிய அடுத்த புயல்!](https://www.minnambalam.com/politics/2020/09/29/47/paneerselvam-ready-to-resign%20-deputy-cm)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *