ஆதினம் விவகாரங்களில் திமுக மூக்கை நுழைக்கிறது: ஈபிஎஸ்

politics

தருமபுரம் ஆதினத்தின் பட்டின பிரவேசத்துக்குத் தடை விதித்தது முதல் மதுரை ஆதினம் இந்து சமய அறநிலையத் துறையைக் கடுமையாக விமர்சித்தது வரை, ஆதினங்களுக்கும் அரசுக்கும் இடையேயான விவகாரம் பேசு பொருளாகியது.

கடந்த ஜூன் 4 ஆம் தேதி தருமபுரம் ஆதினத்தைச் சந்தித்து ஆசி பெற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆதினங்கள் விஷயத்தில் அரசு தலையிடாது என்றார். அதே சமயத்தில் மதுரை ஆதினம், அறநிலையத் துறை அறம் இல்லாத துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என விமர்சித்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறைச் சென்று தருமபுரம் ஆதினத்தைச் சந்தித்து இன்று ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கோயில்களில் ஆய்வு நடத்துவது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ஈபிஎஸ், “இது மதம் மற்றும் கோயில் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எல்லா மதத்தையும் சமமாகப் பார்க்க வேண்டும். ஆண்டு ஆண்டுகாலமாக கோயில்களில் பின்பற்றப்பட்டு வரும் வழிமுறைகளில் தலையிடக்கூடாது. ஆதினங்கள் விவகாரத்தில் இந்த அரசு மூக்கை நுழைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

முந்தைய திமுக ஆட்சியில் பட்டின பிரவேசம் நடந்திருக்கிறது. 500 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு இந்த ஆட்சி தடை விதித்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கொந்தளித்தனர். காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்ததால் தடையை விலக்கினர்” என்று கூறினார்.

வரும் காலத்தில் பட்டினப் பிரவேசத்துக்கு மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ஆட்சி இருந்தால் பார்த்துகலாம். ஆண்டவன் யார் தவறு செய்தாலும் தக்க கூலி கொடுப்பார்” என்றார்.

தினகரன், சசிகலா தொடர்பான கேள்விக்கு, “நாங்கள் டிடிவி தினகரனையும் விட்டுவிட்டோம், சசிகலாவையும் விட்டுவிட்டோம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை. இனி இந்த கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் எனக் கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *