மோடியிடம் ஆளுநர் மீது புகார்: ஆளுநர் அளித்த புகார்!

politics

பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஏப்ரல் 6-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அதேபோல தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பிரதமரை சந்தித்து இன்று சுமார் 20 நிமிடங்கள் பெற்று பேசியிருக்கிறார்.

ஒரு சந்திப்பில் ஆளுநர் மீது புகாரும், இன்னொரு சந்திப்பில் ஆளுநரே முதல்வர் மீது புகாரும் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக வேண்டும் என்று அந்தக் கட்சியின் இளைஞர் அணி கூட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சரத்பவார் சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

பிரதமரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், ” மகாராஷ்டிர மாநில ஆளுநர் கோஷ்யாரி அரசமைப்பு விதிகளின்படி செயல்படுவதில்லை. சட்டமன்ற மேலவைக்கான 12 நியமன உறுப்பினர்கள் பட்டியலை மாநில அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்த பிறகும் அவர் அதை கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறார். இதுபற்றி பிரதமரிடம் முறையிட்டேன். அவர் அதை கவனிப்பதாக கூறினார்.

சிவசேனா தலைவரும் ராஜ்ய சபை உறுப்பினருமான சஞ்சய் ராவத் சொத்துக்கள் சில நாட்களுக்கு முன் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன. ராவத் ஒரு ராஜ்ய சபா உறுப்பினர். அவருக்கு அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பிரதமரிடம் தெரிவித்தேன்” என கூறியிருக்கிறார் சரத்பவார்.

இதே தினத்தில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் ஆன தமிழிசை சௌந்தர்ராஜன் பிரதமரை இன்று சந்தித்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச வளர்ச்சி பற்றி பிரதமரிடம் விவாதித்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டாலும், பிரதமர் மோடி உடனான சந்திப்பில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பற்றி தமிழிசை சவுந்தரராஜன் புகார்களை அளித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“கடந்த 2021 ஜூன் மாதத்திலிருந்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆளுநர் தமிழிசையை சந்திக்கவே இல்லை. அதுமட்டுமல்ல ஆளுநர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்விலும் முதல்வர் கலந்து கொள்வதில்லை. மாநில அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் ஆளுநரை சந்திக்க கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ்.

சில நாட்களுக்கு முன் தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் உகாதி பண்டிகையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில அமைச்சர்கள் கலந்துகொள்வதாக இருந்தும் கடைசி நேரத்தில் விழாவை தவிர்த்து விட்டனர்.

அண்மையில் ஆளுநர் தமிழிசை முலுகு மாவட்டத்துக்கு சென்ற போதும், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக மாவட்டங்களுக்கு செல்லும் போதும் மாவட்ட அதிகாரிகள் கூட ஆளுநரை வரவேற்க வருவதில்லை. இது குறித்தும் பிரதமரிடம் தெலுங்கானா ஆளுநர் புகார் தெரிவித்திருக்கிறார்” என்கிறார்கள் தெலுங்கானா அரசியல் வட்டாரத்தினர்.

மகாராஷ்டிர ஆளுநர் மீது அம்மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி சரத்பவார் பிரதமரிடம் புகார் தெரிவிக்க, அதே நாளில் தெலுங்கானா முதல்வர் மீது ஆளுனர் தமிழிசை புகார் தெரிவித்திருக்கிறார். இப்படி ஓர் ஆளுநர்…. அப்படி ஓர் ஆளுநர்!

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *