கதறும் மாணவர்கள்: பயண செலவை ஏற்கும் அரசு!

Published On:

| By admin

உக்ரைனில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக இன்று போர் தொடுத்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து கல்வி, வேலைக்காகச் சென்று உக்ரைனில் வாழ்பவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து சென்று, 20,000 பேர் வரை உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 5000 பேர் வரை தமிழகத்திலிருந்து தொழில்முறை கல்விக்காகச் சென்றவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் கீவ் நகரில் உள்ள தமிழக மாணவர்கள் , “2 நாட்களாக ரஷ்யா குண்டு போட்டுக்கொண்டிருக்கிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு என்ன நடக்குமோ என்று பயந்துகொண்டே இருக்கிறோம். எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள்” என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். ஏறத்தாழ 900க்கும் அதிகமான தமிழக மாணவர்கள் தமிழக அரசைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.

அதுபோன்று உக்ரைனில் வாழும் தங்களது பிள்ளைகளை மீட்டு வர அவர்களது பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர்.

கரூர் பசுபதி பாளையம் அருணாச்சலம் நகரைச் சேர்ந்த ஆண்டனி கேப்ரியல் – கார்த்திகேயனி தம்பதியின் மகள் ஸ்ரீநிதி. உக்ரைனில் உள்ள டெலிபர் ஸ்டேட் பல்கலையில் 3ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார் தங்களது மகளை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீ நிதியின் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்புவதற்கான செலவைத் தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில தொடர்பு அலுவலரான ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share