தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த 24 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார்.
அங்கே ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள், மற்றும் அந்நாட்டு தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். துபாய் எக்ஸ்போ கண்காட்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன.
இந்த நிலையில் இன்று மார்ச் 27ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள பயணம் அரசுமுறைப் பயணம் அல்ல அது குடும்ப சுற்றுலா என்று விமர்சித்துள்ளார்.
தான் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்தபோது அதை விமர்சித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலினின் கருத்துக்களை நினைவுபடுத்திய எடப்பாடி பழனிச்சாமி….
*முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றது தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது அவரது குடும்பத்துக்காக புதிய தொழில் தொடங்கவா என மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அவர் மட்டும் சென்றிருந்தால் பரவாயில்லை. அந்த துறையைச் சேர்ந்த செயலாளர் சென்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் குடும்பமே சென்றிருக்கிறது.
தமிழக மக்களுக்காக நன்மை செய்யவோ, தொழில் துவங்கவோ அங்கே செல்லவில்லை, தனிப்பட்ட காரணத்துக்காகச் சென்றுள்ளார் என்று மக்கள் பேசிக்கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது.
சர்வதேச வர்த்தக கண்காட்சி 1.10.2021 அன்று தொடங்கப்பட்டு 31.3.2022 அன்று முடிகிறது. இன்னும் 4 நாட்களில் கண்காட்சி முடியவுள்ள தறுவாயில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் சார்பாகச் சர்வதேச வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
எடப்பாடியின் இந்த பேட்டியை துபாயில் இருந்தபடியே கவனித்த முதல்வர் மு. க. ஸ்டாலின் தன்னுடன் துபாய் வந்திருக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அழைத்து, உடனடியாக இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட… அதன்படியே துபாயில் இருந்தபடி எடப்பாடி பழனிசாமியின் புகார்களுக்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
இந்த வீடியோவில்,
“முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று பேட்டியளித்துள்ளார். முதலமைச்சர் பயணம் மேற்கொள்ள இருந்த சூழ்நிலையில் அதற்கான விமான வசதிகள், அவைலபிலிடி கிடைக்காத காரணத்தால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விமானத்துக்கு அரசாங்கம் செலவு செய்யாமல் அதற்கான செலவை திராவிட முன்னேற்றக் கழகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இதை குடும்ப சுற்றுலா என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருக்கிறார். முதல்வரின் பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டுமல்ல… கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் வளத்துக்காகவும் முதல்வர் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
இன்னொன்று இந்த கண்காட்சி முடியும் தருவாயில் முதலமைச்சர் வந்திருக்கிறார் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருக்கிறார். கோவிட் காரணத்தால் இந்த பயணம் தள்ளிப் போனது. அதுவுமில்லாமல் இந்த கண்காட்சி இதுவரை இல்லாத அளவுக்கு முடியும் தருவாயில் தான் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக தான் உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போது திறந்து வைப்பது தான் சரியாக இருக்கும். இதை உணர்ந்துதான் முதல்வர் இந்த பயணத்தை இப்போது மேற்கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி மேலும், தன்னுடைய ஆட்சியில் நடந்த தொழில் முதலீடுகளைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்ட முதலீடுகளின் நிலைமை பற்றி நான் சட்டமன்றத்திலேயே மிகத் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறேன். அவர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்ட முதலீடுகள் எல்லாம் வெறும் ஹம்பக். இப்போது திமுக ஆட்சியில் முதல்வரின் இந்தப் பயணம் தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்கும் வெற்றிப் பயணம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்” என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
**வேந்தன்**