cதஞ்சையில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு!

politics

தஞ்சையில் அண்ணா மற்றும் கலைஞர் சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு திறந்து வைத்தார்.

திருச்சியில் ரூ.1,085 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு செய்துள்ளார்.

திருச்சி மாநகரில் நவீனப்படுத்தப்பட்ட சத்திரம் நகர பேருந்து நிலையம், கால்நடை மருந்தக கட்டிடங்கள், மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்குகளுடன் அழகுபடுத்தப்பட்ட பணிகள் உள்ளிட்ட ரூ.153.22 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுதல் என மொத்தம் ரூ.1,084 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார்.

திருச்சி தாயனூர் கேர் கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்கு ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவி வழங்கி உரையாற்றவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்சி வந்தார் முதல்வர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டுச் சென்றார்.

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் அமைந்துள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்குச் சென்ற அவர், அங்கு நிறுவப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா,கலைஞர் ஆகியோரது முழு உருவச் சிலைகளை திறந்து வைத்தார். சென்னை மீஞ்சூரில் செய்யப்பட்ட, இந்த சிலைகள் ஒவ்வொன்றும் 11.5 அடியாகும்.

இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை வகித்தனர்.

முதல்வருக்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்து, வீரவாள் ஒன்றைப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்துக்குள் சென்ற முதல்வர் அங்கிருந்த பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர் வெளியே வந்த அவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நடந்து சென்று பெற்றுக்கொண்டார். இதையடுத்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அண்ணா, கலைஞர் சிலையை திறந்து வைத்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்துவைத்தேன்.

அவை வெறும் சிலைகள் அல்ல; தமிழ்ச் சமூகத்தின் கலங்கரை விளக்கங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *