உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வழக்கு: எப்போது விசாரணை?

politics

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை மறுநாள் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 27ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

இந்த சூழலில் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வரும் நிலையில், கொரோனா மூன்றாம் அலை உச்சத்தில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசின் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, ஒமிக்ரான், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தலை நடத்தினால் மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். மார்ச் மாதத்திற்கு பிறகு பரவல் குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளார்கள். அப்போது வேண்டுமானால் தேர்தலை நடத்தலாம்.

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம். எனவே இந்த மனுவை நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக எடுத்து பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை மறுநாள் (ஜனவரி 21) மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று மாநில தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.