]ஜார்ஜ் பொன்னையா கைது: முழு பின்னணி!

politics

கல்வியறிவு அதிகம் பெற்ற மாவட்டமான கன்னியாகுமரிதான், தமிழகத்தில் மதப் பதற்றங்களுக்கும் பெயர் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடையிலான மோதல்களும், உரசல்களும் தொடர்ந்துவருகின்றன.

அந்த சங்கிலியில் ஒரு கண்ணியாகத்தான் இன்று (ஜூலை 24) பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் பேசிய பேச்சு கிறிஸ்துவர்களாலும் கண்டிக்கப்பட்ட நிலையில் ஏழு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் ஜார்ஜ் பொன்னையா.

அவர் என்ன பேசினார் என்பதைப் பார்க்கும் முன் இந்த பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியில் இருந்து வருவோம்.

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துவர்கள் அடர்த்தியாக இருப்பதால் ஆங்காங்கே சிறுசிறு ஜெபக் கூடங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இவற்றில் பல அரசின் அனுமதியோ அங்கீகாரமோ இல்லாமல் இயங்கி வருவதாக பாஜக, இந்துமுன்னணி ஆகியவை தொடர்ந்து புகார்கள் சொல்லியும் அவற்றைத் தடுத்து நிறுத்தியும் வருகின்றன.

இந்த வகையில் குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தின் அருகே உள்ள மலங்கரையில் 62 ஆண்டுகளாக இருந்த ஒரு குறுசபை எனப்படும் சிறு ஜெபக் கூடத்தை விரிவுபடுத்திக் கட்டி, அதன் திறப்பு விழாவும் சிறப்பு ஆராதனை விழாவும் ஜூன் 18 ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவித்தனர் கிறிஸ்துவ சபையினர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வந்ததும், அடுத்த நாள் ஜூன் 16 ஆம் தேதி கன்னியாகுமரி பாஜக எம்.எல்.ஏ.வான எம்.ஆர். காந்தி அந்த சர்ச்சின் முன் பாஜகவினரோடு திரண்டார். ”இந்த சர்ச் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதைத் திறக்கக் கூடாது”என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

டி.ஆர்.ஓ. இந்த விவகாரத்தை விசாரித்தார். அப்போது கிறிஸ்துவ சபை தரப்பில் பல ஆண்டுகளாக இந்த சபை இயங்குவதற்கான ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை டி.ஆர்.ஓ.விடம் கொடுத்திருகிறார்கள். ஆனாலும் பாஜகவின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த வளாகத்தைச் சுற்றி பச்சை வண்ண பிளாஸ்டிக் சாக்கு கொண்டு மறைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, திறப்பு விழாவை தடை செய்துவிட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினரும் சுவரொட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாஜகவை கண்டித்து கிறிஸ்துவ சபையினரும், கிறிஸ்துவ சபையினரைக் கண்டித்து பாஜகவினரும் சுவரொட்டிகளை அப்பகுதிகளில் ஒட்டினார்கள்.

இந்த நிலையில் ஜார்ஜ் பொன்னையா பொறுப்பு வகிக்கும் ஜனநாயக கிறிஸ்துவ பேரவையும், அருமனையில் வருடா வருடம் ஜெயலலிதா, தினகரன், எடப்பாடி ஆகியோரை அழைத்து கிறிஸ்துமஸ் விழா நடத்தும் அருமனை கிறிஸ்துமஸ் குழுவினரும், தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து… இந்த விவகாரம் தொடர்பாக அருமனையில் ஜூலை 18 ஆம் தேதி ஒரு கண்டன ஊர்வலம் நடத்த அனுமதி கோரினார்கள். இந்த விவகாரத்தில் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தகவல் அறிந்து பாஜக தரப்பினரும் அதே தேதியில் ஊர்வலம் ஒன்றை அறிவித்தார்கள். குமரியில் எப்போதுமே இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. இரு தரப்பினரும் ஒரே தேதியில் ஊர்வலம் அறிவித்தால் மோதல் ஏற்படும் என்று சொல்லி இரு தரப்பினருக்கும் அனுமதி மறுக்கப்படும். முதலில் அனுமதி கோரியது யார் என்றெல்லாம் காவல்துறையினர் பார்க்க மாட்டார்கள். அந்த வகையில் ஜூலை 18 ஆம் தேதி அருமனையில் கண்டன ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய கிறிஸ்துவ பேரவை, அருமனை கிறிஸ்துமஸ் அமைப்புக்கும் பாஜகவுக்கும் ஊர்வலம் போக தடைவிதித்தனர் போலீசார்.

ஊர்வல தேதிக்கு இரு நாட்கள் முன்னதாக அப்பகுதியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குமரி மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் கிறிஸ்துவ தரப்பினரிடம், “ஊர்வலம் வேண்டாம். பணவிளை சர்ச் தொடர்பாக நான் இன்னும் பத்து நாட்களில் சுமுகமாக முடிவை ஏற்படுத்தித் தருகிறேன்” என்று கூற, அதற்கு சம்மதித்த கிறிஸ்துவ ஜனநாயகப் பேரவை சார்பில் எஸ்.பி.யிடம், “நாங்கள் ஊர்வலம் அறிவித்துவிட்டதால் மக்கள் பலர் வந்துவிட்டனர். எனவே ஊர்வலம் நடத்தவில்லை. அதேநேரம் கூடிய மக்களை வைத்து கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொள்கிறோம்”என்று அனுமதி கேட்டிருக்கிறார்கள். வழக்கமாய் அருமனை கிறிஸ்துமஸ் விழா நடக்கும் மைதானத்தில்தான் இந்த கண்டனக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் காவல்துறையின் உத்தரவாதத்துக்கு இணங்க பணவிளை சர்ச் திறக்க அனுமதி தரும்படி வட்டாட்சியர் ஜெயலட்சுமியிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. அந்தக் கண்டனக் கூட்டத்தில்தான் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சு அவரை கைது வரை கொண்டுபோய்விட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் பலரும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். அவர்களில் ஃபாதர் ஜார்ஜ் பொன்னையாவும் ஒருவர்.

ஜார்ஜ் பொன்னையா பேசும்போது, “நாம் நாகரிகமாக உடையணிவதற்குப் படித்திருக்கிறோம். பயிற்சி பெற்றிருக்கிறோம். ஆனால் அமைச்சர் மனோ தங்கராஜ் சுசீந்திரம் கோயிலுக்கு போகும்போது துணியுடுத்தாமல் போகிறார். நாகரிகமாக உடையணிவதற்கு படித்த நீ துணியுடுத்தாமல் கோயிலுக்குப் போகிறாய். எம்.ஆர்.காந்தி காலில் எப்போதும் செருப்பு அணிய மாட்டார். பூமா தேவியை செருப்பால் மிதிக்கமாட்டேன் என்பதற்காக அவர் செருப்பு போடவில்லையாம். ஆனால் நாங்கள் ஷூ போட்டுக் கொள்வோம். பூமா தேவியின் அழுக்கு எங்கள் மீது ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் ஷூ போட்டுக் கொள்கிறோம்.

சேகர்பாபுக்கு ஒண்ணு சொல்றேன். நீ எத்தனை கோயிலுக்கு குடமுழுக்கு செஞ்சு கொடுத்தாலும், மனோ தங்கராஜுக்கு சொல்றேன் எத்தனை கோயிலுக்கு போய் துணியுடுக்காம சாமி கும்பிட்டாலும் ஒருத்தன் கூட உனக்கு ஓட்டுப் போட மாட்டான். மண்டைக் காட்டு அம்மன் பக்தர்களும், இந்துக்களும் ஓட்டுப் போடப் போறறதில்லை. நீங்க ஜெயிச்சதெல்லாம் கிறிஸ்துவ, இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை என்பதை மறந்துடாதீங்க. உங்க தெறமைய வச்சி நீங்க ஓட்டு வாங்கலை.எங்க ஆயர்கள் கண் அசைப்பாங்க” என்று குறிப்பிட்டுவிட்டு கடைசியாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பற்றி அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறார். மோடி, அமித் ஷாவின் கடைசி நாட்கள் எனக் குறிப்பிட்டு மிகக் கொடூரமாக பேசியிருக்கிறார் ஜார்ஜ் பொன்னையா.

மேலும், “குமரி மாவட்டத்தில் நாங்கள் 42% இருந்தோம். இப்போது கிறிஸ்துவர்கள் 62% இருக்கிறோம். விரைவில் நாங்கள் 70% ஆகிவிடுவோம். எங்களை தடுக்க முடியாது என்பதை இந்து சகோதரர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்”என்று ஆணவமாகப் பேசியிருக்கிறார் ஜார்ஜ் பொன்னையா.

ஜார்ஜ் பொன்னையாவின் இந்த சர்ச்சைப் பேச்சு அப்போது எந்த மீடியாவின் கண்ணிலும் படவில்லை. யாரோ உளறுகிறார் என்று சில பத்திரிகையாளர்கள் காதைப் பொத்திக் கொண்டு போய்விட்டனர்.

ஆனால் சில நாட்கள் கழித்து கிறிஸ்துவ பேரவையினரே அந்தக் கண்டனக் கூட்டத்தைத் தொகுத்து வீடியோவாக வெளியிட்டனர். அதன் மூலம்தான் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு வெளியே வந்து, அவர் மீது தமிழகம் முழுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. எம்.ஆர்.காந்தி சார்பில் குமரி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

மதுரை மறைமாவட்ட பேராயரும், குழித்துறை மறை மாவட்ட திருத்தூதரக நிர்வாகியும், தமிழக ஆயர் பேரவை தலைவருமான பேராயர் அந்தோணி பாப்பு சாமி,

“ஜனநாயக கிறிஸ்துவப் பேரவையின் தலைவரும் குழித்துறை மறை மாவட்ட பங்குத் தந்தையுமான ஜார்ஜ் பொன்னையா அருமனை பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துகள் குழித்துறை மறை மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் கருத்துகள் அல்ல. அவர் சார்ந்திருக்கும் அமைப்புக்கும் குழித்துறை மறை மாவட்டத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் பேசியிருக்கும் பேச்சுகள் கண்டனத்துக்கு உரியவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, அருமனை கிறிஸ்துமஸ் பேரவை தலைவர் ஸ்டீபன் உள்ளிட்ட மூவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கேரளாவுக்கு தப்பிச் சென்றிருப்பார் என்று கருதப்பட்ட ஜார்ஜ் பொன்னையா இன்று அதிகாலை மதுரை அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை காவல் நிலையத்துக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *