சில மாதங்களுக்கு முன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் அமைச்சரான முகமது ஜான். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஜான், கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் போது அதிமுகவின் 11 உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி உத்தரவு வந்ததால் தானும் ஆதரவாகவே வாக்களித்தார்.
அதிமுகவின் 11 பேரின் வாக்கால்தான் மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேறி சட்டமானது. அதனால்தான் இந்தியா முழுதும் இன்று போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
முகமது ஜான் , ராணிப்பேட்டை அனைத்து ஜமாத்துகளின் காப்பாளர் என்ற கௌரவ பதவியில் இருந்தார். இஸ்லாமியர்களுக்கு குடியுரிமையை மறுக்கும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், வெகுண்டு எழுந்த முஸ்லிம் பெரியவர்கள் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத்தை கூட்டி அதன் காப்பாளர் என்ற பதவியில் இருந்து முகமது ஜானை நீக்கிவிட்டார்கள்.
சட்ட மசோதா மாநிலங்களவையில் வரும்போதே ஜானுக்கு அலைபேசி செய்து, ‘அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருந்தாலும் நீங்கள் வெளி நடப்பாவது செய்துவிடுங்கள்’ என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கட்சியின் அழுத்தம் காரணமாக அவர் ஆதரவாக வாக்களித்திருக்கிறார்.அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறார் முகமது ஜான்.
“அமைதியா இருந்தேன்.திடீர்னு கூப்பிட்டு எம்பி பதவி கொடுத்தாங்க. இப்படி ஒரு சமுதாய நெருக்கடிக்கு ஆளாவேன்னு நினைக்கவே இல்லை. என்னதான் அமைப்புகள்லேர்ந்து நெருக்கடி வந்தாலும் இதுபோன்ற கட்சிகள்ல இருக்கிற முஸ்லிம்கள், கட்சி முடிவுக்குதானே கட்டுப்பட வேண்டியிருக்கு”என்று தனக்கு நெருக்கமான சிலரிடம் புலம்பியிருக்கிறார் முகமது ஜான்.�,