f50,000 கடன்: அமைச்சரின் அறிவிப்பு உண்மையா?

Published On:

| By Balaji

ரூ.50 ஆயிரம் கடன் என்ற அமைச்சரின் அறிவிப்பு உண்மையா என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டு மாதங்களாக அமலில் இருக்கும் ஊரடங்கால், வருமானமின்றி பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறு, குறு தொழில் செய்வோர் ரேஷன் அட்டையுடன் சென்று கூட்டுறவு வங்கிகளில் காண்பித்தால் போதும், ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்தார். குறைந்த வட்டியில் 350 நாட்கள் வரை தவணை முறையில் செலுத்தலாம் என்றும், அதற்கும் குறைவான காலத்தில் அசலை செலுத்துவோர் மீண்டும் கடன் பெறலாம் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கும் பெரும் வரவேற்பு இருந்தது.

எனினும் சில வங்கிகளை வியாபாரிகள் அணுகியபோது கடன் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (ஜூன் 5) தனது ட்விட்டர் பதிவில், “குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன என்று குறிப்பிடும் தினகரன், கொரோனா துயரால் ஏற்கெனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலும், “அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன ? என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “கூட்டுறவு வங்கியில் கடன் பெற குடும்ப அட்டையும், சிறு குறு வியாபாரிகளாக இருந்தால் போதும் அவர்களுக்கு கடன் வழங்கப்படும். வங்கியில் கடன் இல்லையென்று சொன்னால் எனக்கு வாட்ஸ் ஆப்பில் புகார் அளிக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share