துரைமுருகன் காலில் விழுந்தால்தான் கட்சியில் இணைய முடியுமா?

politics

-வேலூர் திமுகவில் விவாதம்!

திமுகவின் பேச்சாளராகவும், கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராகவும் இருந்த குடியாத்தம் குமரன் கடந்த செப்டம்பர் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் திமுகவில் சேர முயற்சித்த அவர், துரைமுருகனின் வீடு தேடிச் சென்று காலில் விழுந்திருக்கிறார் என்று வேலூர் திமுகவினர் மத்தியில் தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

கடந்த ஆகஸ்டு மாதம் வேலூர் தேர்தல் ஒரு வழியாக முடிந்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆன பிறகு, கதிர் ஆனந்துக்கு வேலை செய்யாதவர்கள் என்ற பட்டியலை எடுத்து வைத்துக் கொண்டு அதை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார் துரைமுருகன். அதன்படியே ஏற்கனவே சிலர் நீக்கப்பட்டார்கள். இதேபோல செப்டம்பர் மாதக் கடைசியில் திமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரனும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இதுபற்றி மின்னம்பலம், காமில் ஏற்கனவே, [அறிவாலயத்துக்கு வரமாட்டேன் -துரைமுருகன் நெருக்கடி- என்ன செய்தார் ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/10/11/32/mkstalin-duraimurugan-arivalayam-gudiyatham-kumaran-expel-from-dmk)என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் மீண்டும் கட்சியில் சேர்வதற்காக துரைமுருகனிடம் சரண்டர் ஆகியிருக்கிறார் குடியாத்தம் குமரன்.

இதுகுறித்து வேலூர் திமுகவினரிடையே பேசினோம்,

“துரைமுருகனைப் பற்றி ஓரிரு வருடம் முன்பு சக நிர்வாகியிடம் குமரன் கோபத்தில் பேசியதைப் பதிவு செய்து துரைமுருகனிடம் கொடுத்துவிட்டனர். அதுபற்றி துரைமுருகன் கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். ஆனால் தலைமைக் கழகத்தில் நல்ல பெயரெடுத்து வந்த குடியாத்தம் குமரன், வேலூர் நந்தகுமாரோடு நெருக்கம் காட்டத் தொடங்கினார். இது கதிர் ஆனந்துக்குப் பிடிக்கவில்லை. எனவே குமரனை வளரவிடாமல் தடுப்பதற்காக தனது தந்தையை பற்றி அவதூறு பேசிய குமரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று துரைமுருகன் மூலமாகவே அழுத்தம் கொடுத்து நீக்க வைத்துவிட்டார்.

குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டாலும் தன் காரில் இருந்து திமுக கொடியை கழற்றவில்லை. வேறுசில கட்சிகளில் இருந்து பேரம் பேசினாலும் திமுகவிலேயேதான் இருப்பேன் என்று உறுதியாக இருந்தார். மேலும் தன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதற்கும் தொடர் முயற்சியில் இருந்தார். அப்போதுதான் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக் காரன் காலில் விழுவது என்ற முடிவுக்கு வந்தார். சில வாரங்களுக்கு முன் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

துரைமுருகனுக்கு கோபம் இருந்தாலும் வீடு தேடி வந்துவிட்டதால், ‘என்னய்யா…’ என்று கேட்டிருக்கிறார். ‘ஐயா.. உங்க மேல எனக்கு எந்த மரியாதைக் குறைவும் இல்லைங்கய்யா. நீங்க சொன்னாதான் தலைமையில மறுபடி என்னை சேர்த்துப்பாங்க. அதனால ஆயிரம் முறை காலில் விழத் தயாரா இருக்கேன். என்னை மன்னிச்சுடுங்க’ என்று சொல்லி பட்டென துரைமுருகன் காலில் விழுந்துவிட்டார் குடியாத்தம் குமரன். இதை எதிர்பார்க்காத துரைமுருகன், ‘யோசிச்சு சொல்றேன் போயிட்டு வா’ என்று சொல்லிவிட்டார்.

இதையடுத்து அப்போதைய முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவிடம் சென்று மன்னிப்புக் கடிதமும் கொடுத்திருக்கிறார் குடியாத்தம் குமரன். இப்போது முதன்மைச் செயலாளராக நேரு இருக்கும் நிலையில் அந்தக் கடிதத்தை அவர் பார்த்து தலைமைக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் அறிவாலயத்துக்கு படையெடுத்து வருகிறார் குமரன். வேலூர் மாவட்டத்தில் கட்சியில் தீவிரப் பணியாற்றும் நிர்வாகியாக இருந்தாலும், சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிட துரைமுருகன் காலில் விழ வேண்டியிருக்கிறது” என்று முடித்தார்கள்.

இதுபற்றி நாம் குடியாத்தம் குமரனையே தொடர்புகொண்டு பேசினோம்.

“கட்சியில் நான் பொறுப்பில் இல்லையென்றாலும் என்றும் நான் திமுகதான். என் ரத்தம் சிவப்பாக அல்ல, கருப்பு சிவப்பாகத்தான் ஓடுகிறது. எனக்கு ஐந்து மொழி தெரிந்தாலும், என்னை எல்லாருக்கும் தெரியுமென்றால் அது திமுகவால்தான். . திமுகவில் இருந்து என்னை யாரும் பிரிக்க முடியாது. பொருளாளர் துரைமுருகன் இந்த இயக்கத்துக்காக ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர். வேலூர் மாவட்டத்தின் கலங்கரை விளக்கம். அவரது காலில் விழுவது என்பது என் முன்னோடிகளை வணங்குவதற்கு ஒப்பானது. அதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று ஒரே போடாகப் போட்டார்.

**-ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *