ராஜன் குறை
அரசாங்கம் தவறிழைக்கலாம்; நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை காட்டி விவாதங்கள் மறுக்கப்படலாம்; நீதிமன்றமும் சரியாக சிந்திக்காமல் தீர்ப்பு வழங்கலாம். நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகிய இரு மன்றங்களையும்விட மக்களாட்சியில் வல்லமை மிக்க மன்றம் பொதுமன்றம்தான். ஏனெனில் இதில்தான் சுதந்திர சிந்தனையின், விமர்சன சிந்தனையின் வெளிப்பாடுகள் மக்களின் குரல்களில் ஓங்கி ஒலிக்கும். ஆனால் சமகால நிகழ்வுகளை கண்ணுறும்போது பொதுமன்றம் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறதா என்ற ஐயமே உருவாகிறது. அரசாங்கம் அப்படித்தான் செய்யும், அரசியலில் இதெல்லாம் சகஜம், தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கிவிட்டதே, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதே என்று கூறி சுதந்திர சிந்தனையை, விமர்சன சிந்தனையை புறமொதுக்கும் போக்கு ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. அதையே சமூக ஊடகங்களிலும் மக்கள் வெளிப்படுத்த துவங்கிவிட்டார்கள். மக்கள் தங்களிடம்தான் அதிகாரம் இருக்கிறது என்பதை மறந்து வெறும் பார்வையாளர்களாக மாறிவிட்டார்கள். கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல, தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பது போல, சினிமா பார்ப்பது போல நாட்டு நடப்புகளையும் பார்க்கிறார்கள். ஒரு பொது நல அமைப்பு தவறிழைக்கும்போது தாம் கண்டித்து குரலெழுப்ப வேண்டும் என்பதையே மறந்து விடுகிறார்கள்.
வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்களை புறக்கணித்து நிறைவேற்றிய அரசாங்கம், ஒராண்டு காலம் விவசாயிகள் கடுமையாக போராடிய பிறகு, அவற்றை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே திரும்பப் பெற்றது மக்களாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் அல்லவா? பிரதமர் நாட்டு மக்களிடம் நேரடியாக தொலைக்காட்சியில் பேசுவதன் பெயர் மக்களாட்சி அல்ல. மக்கள் பிரதிநிதிகளின் அவையான பாராளுமன்றத்தில் அவர் தன் முடிவை விளக்கி, விமர்சனங்களை எதிர்கொள்வதுதான் மக்களாட்சி. நாடாளுமன்றத்தினை கிள்ளுக்கீரையாக நினைக்கும் இந்த போக்கினை கண்டு நமது பொதுமன்றம் பொங்கி எழக்காணோம்.
அ.இ.அ.தி.மு.க என்ற கட்சியில் அதன் அடிப்படை விதிகளை அப்பட்டமாக மீறி ஒரு சிலர் கட்சியினை கையகப்படுத்தி பாரதீய ஜனதா கட்சியிடம் அடமானம் வைக்கிறார்கள். இப்படிப்பட்ட விதிமீறலை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டால் அது உடனே விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடாது. பொதுமன்றம் தன் உரத்த குரலை எழுப்பினால்தான் தேர்தல் ஆணையம் தன் தவறை சரிசெய்து கொள்ளும். ஆனால் ஊடகங்களும் சரி, அவற்றில் கருத்து கூறுபவர்களும் சரி, தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டால் அது தெய்வத்தின் குரல் என்பதுபோல பேசுகிறார்கள். அது அரசியல் அழுத்தத்தின்ல் வழங்கப்பட்ட தவறான தீர்ப்பு என்பது தெரிந்தாலும் அதனை கேள்விக்கு உட்படுத்த, கண்டிக்க மறுக்கிறார்கள். பள்ளிச் சிறுவர்களும் புரிந்துகொள்ளக் கூடிய கட்சியின் அடிப்படை விதிகள் மீறப்பட்டிருப்பதை கண்டிப்பது பொதுமன்றத்தின் பொறுப்பு என்பதையே மறந்துவிட்டு அதை உட்கட்சி பிரச்சினை என்று நினைப்பது முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற செயலாகும். நீதி மன்றங்களோ எப்போது ஒரு வழக்கை விசாரிக்கும் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. ஒரு தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றவருக்கு எதிரான தீர்ப்பை அடுத்த தேர்தலில் அவர் தோற்ற பிறகு வெளியிடுகின்றன நீதிமன்றங்கள். பொதுமன்றம் சுரணையற்று வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றங்கள் மக்களுக்காகவா, அல்லது தேவலோகத்திலிருக்கும் தெய்வங்களுக்காகவா? ஏன் அரசியல் முக்கியத்துவம் உள்ள வழக்கை விசாரிக்காமல் தாமதம் செய்கிறது நீதிமன்றம் என்ற கேள்வியை பொதுமன்றம் எழுப்ப வேண்டாமா?
இந்த கேள்வியை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த பொதுமன்றம் எப்படி உருவாகியது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
**எப்பொழுது தோன்றியன பொது வாழ்க்கையும், பொது மக்களும்? **
சமகால சமூக அமைப்பு உருவாகும் முன்னால் யாரிடம் அதிகாரம் குவிந்திருந்தது என்பதை புரிந்துகொள்வது முக்கியம். போரில் ஈடுபடவல்லவர்களாகவோ, படைகளை கட்டுப்படுத்துபவர்களாகவோ இருந்த அரசர்களிடமும், குறு நில மன்னர்கள், நிலபிரபுக்களிடமும், அவர்களுடன் கூட்டாக இயங்கும் பூசாரிவர்க்கம், மடாதிபதிகள் போன்றவர்களிடமும் அதிகாரம் குவிந்திருந்தது. பிற உழைக்கும் மக்கள் அவர்களுக்கு கீழ் படிந்தவர்களாக இருந்தார்கள். இந்தியாவில் பார்ப்பனர்கள் என்ற பூசாரி வர்க்கத்திடமும், சத்திரியர்கள் என்ற போர்புரியும் வர்க்கத்திடமும் அதிகாரம் இருந்தது. இவர்களுடன் வைசியர்கள் என்ற வியாபாரிகளின் வர்க்கமும் செல்வாக்குடன் இருந்தது. பிற மக்களெல்லாம் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று கருதப்பட்டனர். அவர்கள் பணி “மேல்” வர்ணத்தாரின் கட்டளைகளுக்கு கீழ்படிவதுதான்.
அப்போது “பொது மக்கள்” என்ற கருத்தாக்கம் நிலவவில்லை. மக்கள் அவர்கள் குடும்பங்களில் தனி வாழ்க்கை வாழ்பவர்களாகவும், அதிகார அமைப்புகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தனரே தவிர பொது வாழ்க்கை, பொது சமூகம் என்பதெல்லாம் சாமானியர்களுக்கு உரியதாக இல்லை. உலகின் பெருவாரியான பகுதிகளில் இப்படிப்பட்ட ஏற்பாடே வெவ்வேறு வடிவங்களில் நிலவி வந்தது எனலாம். ஐரோப்பாவில் முதலீட்டிய உற்பத்தி முறை உருவாக துவங்கிய போதுதான் தனி நபரின் சொத்துரிமைக்கு முழு உத்திரவாதம் வழங்குவதும், அதனையொட்டி ஒரு ”உடமை சமூகம்” உருவானதாகவும் பொருளாதார வல்லுனர் தாமஸ் பிக்கெட்டி கூறுவது ஏற்கத்தக்கது. அப்படி உருவான சமயத்தில்தான் அப்படியான புதிய தொழில்முனைவோர்கள், பூர்ஷ்வா வர்க்கம் என்று அழைக்கப்பட்ட வர்க்கம், பொது விவகாரங்களை பேசும் சந்திப்புகளை, கூட்டங்களை உருவாக்கத் துவங்கியது என்பதை ஆராய்ந்த ஹேபர்மாஸ் (Jurgen Habermas; b.1929) என்ற அறிஞர் அதனை பொது மன்றம் (public sphere) என்றழைத்தார். தொடர்ந்து அச்சு ஊடகம், பின்னர் மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பிரதிநிதித்துவம் உருவான போது இந்த பொதுமன்றம் பெருமளவு விரிவு கண்டது. மக்களாட்சியில் குடிமக்களின் குரல் எந்த ஒரு பிரச்சினையிலும் ஒலிக்கும் களமாக பொதுமன்றம் விளங்குவதுதான் மக்களாட்சியின் சிறப்பம்சமாக, ஆதாரசுருதியாக இருக்கும்.
சம காலத்தில் பொது மன்றம் என்பதில் கூட்டங்கள், நேரடி சந்திப்புகள் ஆகியவற்றை கடந்து பெரும்பாலும் அச்சு ஊடகம், தொலைகாட்சி ஊடகம் ஆகியவற்றின் பங்கு பெரிதாகத் துவங்கியது. மிக சமீபத்தில் சமூக ஊடகம் என்ற மிகப்பெரிய இணையவழி ஊடகம் வெள்ளம் போல மக்களின் பங்கேற்பை திறந்துவிட்டுள்ளது. அதே சமயம் அது பல்வேறு தவறான செய்திகளையும், சிந்தனைகளையும் ஆதிக்க சக்திகள் திணிப்பதற்கான களமாகவும் இருக்கிறது. பிற ஊடகங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் இல்லாததால் பொய் செய்திகளையும் சமூக ஊடகங்களில் பரப்ப முடிகிறது. இந்த சாதக, பாதகங்களை கடந்து இன்றைய நிலையில் பொதுமன்றம் பெரியதொரு சமூக பரப்பை எட்டியுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் அத்தகைய பொதுமன்றம் பொறுப்புடன் செயல்படுகிறதா, மக்களாட்சியினை வலுப்படுத்த உதவுகிறதா என்பதே நம்முன் உள்ள கேள்வி. ஆட்சியாளர்களின், அதிக்க சக்திகளின் ஊதுகுழல்கள் மட்டுமே ஒலிப்பது பொதுமன்றமல்ல; சுதந்திர சிந்தனையும், விமர்சன சிந்தனையும் ஆதிக்கத்திற்கு எதிராக பேசும்போதுதான் பொதுமன்றம் தன் பொறுப்பை நிறைவேற்றும்.
**பொதுமன்ற ஆற்றலின் வரலாற்றுத் தருணம் **
பொது மன்றத்தின் குரலால் நீதிமன்ற தீர்ப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்ட முக்கிய தருணங்களில் ஒன்று ஃபிரான்ஸ் நாட்டில் 1986 முதல் 1906 வரை நடந்த டிரைஃபஸ் விவகாரம். டிரைஃபஸ் (Dreyfus) என்ற ராணுவ அதிகாரி நாட்டின் ராணுவ ரகசியங்களை ஜெர்மனிக்கு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவரை விசாரித்த ராணுவ நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் அதற்குப் பிறகும் தகவல்கள் கசிவது கண்டறியப்பட்டது. வேறொரு விசாரணை அதிகாரி டிரைஃபஸ் குற்றத்திற்கு ஆதாரமாக காட்டப்பட்ட ஆவணங்கள் ஃபோர்ஜரி செய்யப்பட்டவை என்று கண்டுபிடித்தார். பொதுமன்றத்தில் தகவல்கள் கசிந்து பரபரப்பானது. ஆனாலும் ராணுவம் வழக்கை மீண்டும் விசாரிக்க முன்வரவில்லை. டிரைஃபஸ் ஒரு யூதர். அவர் யூதவெறுப்பின் காரணமாக குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. மற்றொரு ராணுவ அதிகாரியின் மீது குற்றம் சாட்டப்பட்டபோது அவர் குற்றவாளியல்ல என்று ராணுவம் விடுவித்தது. ராணுவம் தன் தீர்ப்புகள் கேள்விக்குள்ளாவதை விரும்பவில்லை. அந்த சமயத்தில்தான் எமிலி சோலா (Emile Zola; 1840-1902) என்ற பிரபல நாவலாசிரியர் நீதிமன்றத்தின் செயல்பாட்டை குற்றம் சாட்டி கடுமையாக எழுதினார். இதற்காக அவர் ஓராண்டு சிறை தண்டனை கூட விதிக்கப்பட்டு ஏற்றார். ஆனால் பிரச்சினை பெரிதாகி நாடு முழுவதும் விவாதங்கள் பெருகின. தேசியவாதிகள், கத்தோலிக்கர்கள் டிரைஃபஸ் குற்றவாளி என்று கூற, சோஷலிஸ்டுகள் அவர் நிரபராதி என்பதற்கான வாதங்களை முன்வைத்தனர். ஃபிரான்ஸின் அரசியல் அணிகளே இந்த விவகாரத்தில் மாற்றங்கள் கண்டன. இறுதியில் டிரைஃபஸ் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, முதல் உலகப்போரில் ராணுவத்திலும் மீண்டும் பணியாற்றினார்.
**பொதுமன்றத்தின் பொறுப்பு**
நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவதுதான் குடிமக்களின் கடமை; தீர்ப்பை எழுதிய நீதிபதிகளுக்கு உள் நோக்கம் கற்பிக்கக் கூடாது. ஆனால் தீர்ப்பை விமர்சிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. உதாரணமாக ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு முப்பதாண்டுகளாக மிக விரிவாக பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு, இறுதியில் உச்ச நீதிமன்றம் ஐயம் திரிபுற போயஸ் தோட்ட வீட்டில் வசித்த ஜெயலலிதாவும், அவருடன் வசித்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் கூட்டாக சதி செய்து ஜெயலலிதாவின் அதிகாரங்களை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்துள்ளார்கள் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. ஆனால் அ.இ.அ.தி.மு.க- உறுப்பினர்கள் அந்த வழக்கை பொய் வழக்கு, தி.மு.க சதி என்று சொல்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஜெயலலிதா ஊழலே செய்திருந்தாலும் அவர் சமூகத்திற்கு நன்மையும் செய்துள்ளார்; அதனால் அவரை தலைவராக நினைப்போம் என்று மக்களில் அவர் ஆதரவாளர்களும் கருதலாம். அதுவும் அவர்கள் உரிமை.
தமிழக அரசாங்கம் அவருக்கு கடற்கரையில் நினைவகம் எழுப்பியது. அதுவும் அவர் ஒரு அரசியல் தலைவர் என்பதால், அவருடைய கட்சி முப்பது சதவீத ஓட்டுக்களை வாங்குவதால் தவிர்க்க முடியாதது எனலாம். ஆனால் அவரது தனிச்சொத்தான போயஸ் தோட்ட இல்லத்தையும் அரசு பணம் கொடுத்து வாங்கி நினைவில்லம் அமைப்பது தேவையா என்பதை நீதிமன்றம் கேட்டுள்ளது. எதற்கு நினைவில்லம் அது? உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்தபடி பதவியை தவறாக பயன்படுத்தி சதி செய்து ஊழல் செய்து சொத்து குவித்ததற்கான நினைவில்லமா? அந்த இல்லத்தின் விலாசம் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருப்பதை அந்த நினைவில்லத்தில் அச்சடித்து தொங்க விடுவார்களா? பொது மன்றம்தான் இது போன்ற பிரச்சினைகளில் தங்கள் குரலை வலுவாக எழுப்ப வேண்டும். தொலைக்காட்சி விவாதங்களில் கட்சிக்காரர்கள் பேசுவதெல்லாம் கட்சி சார்பாக கருதப்படுகிறது. பத்திரிகையாளர்கள் கட்சி சார்பாளர்களாக கணிக்கப்படுகிறார்கள். அதனால் அறப்போர் இயக்கம் போன்ற பொது மன்ற அமைப்புகள் பெருக வேண்டும். அவர்கள் இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளை கண்டித்து பரப்புரை செய்ய வேண்டும்.
இதில் இன்னொரு பிரச்சினை ஊடகங்கள் பலவும் கார்ப்பரேட் சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சில பிரச்சினைகள் ஊதிப்பெருக்கப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன (amplification effect). 2-ஜி ஊழல் குற்றச்சாட்டை அதற்கு உதாரணமாக சொல்லலாம். 2-ஜி வழக்கில் ஒரு பொய்யான தொகை நட்டமென கணக்கிடப்பட்டு, ஆனால் அந்த மொத்த தொகையும் ஊழல் பணம் என்ற பொருள்பட ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்டது வெளிப்படையான திட்டமிட்ட சதி. இது போன்ற சமயங்களில் கார்ப்பரேட் சக்திகள் ஒரு சில விஷயங்களை தூண்டிவிட்ட பிறகு அனைவரும் அந்த பரபரபிற்கு ஆட்பட்டு பிரச்சினையை ஊதிப்பெருக்க உதவுகிறார்கள். அதே சமயம் அப்பட்டமாக அனில் அம்பானிக்காகவே நரேந்திர மோடி அரசால் செய்யப்பட்ட ரஃபேல் பேர ஊழல் ஊடகங்களால் மூடி மறைக்கப்படுகிறது (cover-up). கடந்த 2019 தேர்தலில் இந்த ரஃபேல் விவகாரம் பெரிதாகிவிடாமல் இருக்க பெரும்பாலான ஊடகங்கள் துணை நின்றன. என்.ராம் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் கடுமையாக முயன்றும் அதனை முக்கிய பிரச்சினையாக மாற்ற முடியவில்லை.
அதனால் மக்கள் விழிப்புடன் இருப்பதும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி தங்கள் சுதந்திரமான விமர்சன சிந்தனையை முன்னெடுப்பதும், மெளனமாக இருக்காமல் அநீதிக்கு எதிராக பேசுவதும் பொதுமன்றத்தை காப்பாற்ற மிகவும் அவசியம்.
**கட்டுரையாளர் குறிப்பு:**
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com.
�,”