கமல்நாத் – சிந்தியா மோதல்: அமைச்சர்கள் ராஜினாமா – அந்தரத்தில் ம.பி அரசு!

politics

மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசாங்கம் தனது கோஷ்டிப் பூசல்களால் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த பாஜகவைத் தோற்கடித்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள்தான் ஆகிறது.

2018ஆம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் சீனியரான கமல்நாத்தா அல்லது ஜூனியரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவா என்ற போட்டி எழுந்தது. இந்தப் போட்டியில் ராகுல் காந்தி ஆட்சிப் பொறுப்பை கமல்நாத்திடம் கொடுத்தார். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியையாவது தன்னிடம் கொடுப்பார் என்று சிந்தியா எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கொடுக்கப்படாததால் போபால் முதல் டெல்லி வரை அவருடைய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் முதல் சில அமைச்சர்கள் உள்ளிட்ட 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காணாமல் போனார். அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது மொபைலும், அவருடைய ஆதரவாளர்கள் மொபைலும் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டன. வருகிற ராஜ்யசபா தேர்தலில் சிந்தியாவுக்கு வாய்ப்பு கேட்டும், அவருடைய ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கேட்டும் சிந்தியா நெடு நாட்களாகவே வலியுறுத்தி வந்தார். ஆனால் கமல்நாத் தன்னை கண்டுகொள்ளாததால், சில மாதங்களுக்கு முன்பே ட்விட்டரில் தான் காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தையே அகற்றிவிட்டார் சிந்தியா.

இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல் பற்றி விசாரிக்க டெல்லி சென்ற மாநில முதல்வர் கமல்நாத், 17 எம்.எல்.ஏ.க்களுடன் சிந்தியா காணாமல் போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். டெல்லி விசிட்டைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு போபால் திரும்பினார். உடனடியாக அமைச்சர்களை அவசரமாக வரவழைத்துக் கூட்டம் நடத்தினார். இதில் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும், புதிய அமைச்சரவையை அமைக்குமாறும் கமல்நாத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், சிந்தியா நேற்று இரவு வரை தொடர்புக்குள் வரவில்லை. அவருடைய எம்.எல்.ஏ.க்கள் பாஜக ஆளும் கர்நாடகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே காஷ்மீரீல் 370 சிறப்புப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தவர் சிந்தியா. எனவே அவர் பாஜக தலைவர்களோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்கிறார் என்ற பதற்றமும் கமல்நாத்துக்குத் தொற்றிக்கொண்டது. இதனால் அனைத்து அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய வைத்து சிந்தியா ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியைத் தர தயாராகிறார். அதேநேரம் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி, ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஆகியவற்றை சிந்தியாவுக்கு அளித்து அவரைத் தலைமை சமாதானப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவற்றையெல்லாம் ஆவலோடு கவனித்துக்கொண்டிருக்கும் மத்தியப் பிரதேச பாஜக, இன்று (மார்ச் 10) தனது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

காங்கிரஸின் கமல்நாத் – ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோருக்கு இடையிலான அதிகார மோதலால் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் ஆட்சி ஆபத்தில் இருக்கிறது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *