வேட்புமனு தாக்கல்: எலிப்பொறியுடன் வந்த வேட்பாளர்!

politics

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. எட்டு அரசியல் கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண்கின்றன. அதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

வேட்புமனுதாக்கலின்போது பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது வழக்கம். குறிப்பாக சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் வித்தியாசமான முறையில் வேட்பு மனுவை தாக்கல் செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால், இன்றைக்கு அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

**எலிப்பொறியுடன் வந்த வேட்பாளர்**

மதுரை மாநகராட்சி மூன்றாவது வார்டு ஆனையூர் பகுதியில் ஜாஃபர் ஷெரீப் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஏர்கிராஃப்ட் இன்ஜினியர் வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு தேர்தலில் நிற்க வந்துள்ளார். இன்று அவர் மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ரங்கராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கோட் சூட் அணிந்து கொண்டு கையில் எலி பொறியும், ரூ.2000 நோட்டுடனும் வந்தார். ’பொறியில் சிக்கிய எலியும், பணத்திற்கு ஓட்டை விற்ற நீயும் ஒன்று தான்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு வேட்பு மனு தாக்கல் செய்ய ஜாஃபர் ஷெரீப் வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதுகுறித்து ஜாஃபர் ஷெரீப் கூறுகையில், “மற்ற வார்டுகளை காட்டிலும், என்னுடைய வார்டை முன்னுதாரணமாக மாற்றுவேன். மாதிரி தூய்மை வார்டாக மாற்றுவதே எனது லட்சியம். நான் கையில் கொண்டு வந்துள்ள எலிப்பொறியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை மாட்டியுள்ளேன். இதேபோன்று பணத்துக்காக ஆசைப்பட்டு, பொறியில் சிக்கிய எலியைப் போன்று ஆகாமல், வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். என்னைப் போன்ற பட்டதாரி இளைஞர்களின் சார்பாக இதை கேட்கிறேன். ஓட்டுக்கு பணம் கொடுத்து இந்த எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால், அடுத்து வாக்காளர்களை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று கூறினார்.

**பணமாலையுடன் வந்த வேட்பாளர்**

ஆவடி மாநகராட்சியில் சுயேச்சையாக போட்டியிடும் சிவா என்பவர் 500 ரூபாய் நோட்டுகளால் ஆன பணமாலையை அணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,” ஜனநாயகத்தை விட பணநாயகமே ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 என்று பணம் கொடுக்கிறார்கள். அப்படி காசு கொடுக்கிறவர்களை ஜெயிக்க வைக்காதீர்கள். ஒருமுறை அவர்கள் தோற்றுவிட்டால், அடுத்த முறை காசு செலவு பண்ணி தேர்தலில் நிற்க பயப்படுவார்கள். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, பணமாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன்” என்று கூறினார்.

**மாட்டுவண்டியில் வந்த வேட்பாளர்**

தூத்துக்குடி மாநகராட்சியில் 32வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் துரை என்பவர் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். புகையில்லா மாநகரை உருவாக்குவதற்காக மாட்டு வண்டியில் வந்ததாக துரை தெரிவித்தார்.

**பிபிஇ கிட் அணிந்து வந்த வேட்பாளர்**

கோவை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 94வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட சக்திவேல் என்பவர், குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பிபிஇ கிட் எனப்படும் கவச உடை அணிந்து வந்து, அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். கொரோனா காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முழு கவச உடை அணிந்து வந்த இவரை அதிகாரி பாராட்டினார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *