மீனவர்கள் மீது பாட்டில்கள் வீசித் தாக்கிய இலங்கை கடற்படை!

politics

சிறிது காலம் இல்லாமல் இருந்த தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படை தாக்குதல் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் கூடுதலான படகுகளில் வங்கக்கடலுக்குச் சென்று கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஐந்து ரோந்து படகுகளில் நேற்று (அக்டோபர் 27) காலை அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசிக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். அத்துடன், மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் தாக்குதலில் இரு மீனவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறை ஆகும். ஏற்கனவே கடந்த 18ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்தனர்.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில், “நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் – தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் – அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு மத்திய பாஜக அரசு எவ்விதத்திலும் துணைபோகக் கூடாது என்றும் டி.ஆர்.பாலு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “இலங்கைப் படையினரின் இந்தச் செயல் அத்துமீறல் ஆகும். சிங்களப் படையினர் தமிழக மீனவர்கள் மீது, போக்கிரிகளைப் போல கற்களை வீசித் தாக்கியிருப்பதை மத்திய, மாநில அரசுகள் சும்மாவிடக் கூடாது. தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

“இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததுதான். அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகின்ற குரலை, இந்திய அரசு கண்டு கொள்வது இல்லை. தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கு, கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை, நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தமிழக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இதனை தடுப்போம். இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்று பதிலளித்தார்.

*எழில்*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *