அன்று 2ஜி இன்று ஜி ஸ்கொயர் : அண்ணாமலை வாசித்த ஊழல் பட்டியல்!

politics

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு மட்டும் நிலம் அப்ரூவல் கொடுப்பது தொடர்பாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “தமிழகத்தில் அதிகமாக இருப்பது ஜி ஸ்கொயர் நிறுவனம். எந்த ரோட்டில் பார்த்தாலும் கூட இருக்கும். ஜி ஸ்கொயர் முன்னேற்றக் கழகமாக தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) மாறியிருக்கிறது.

ஒருத்தர் ஒரு நிலத்தை வாங்கி பிளாட் போட்டு மக்களுக்கு விற்கிறார் என்றால் அதற்கு ஒப்புதல் கொடுக்க சென்னையில் சிஎம்டிஏ இருக்கிறது. தமிழகம் முழுவதும் நிலம் ஒப்புதலுக்கு டிடிசிபி உள்ளது. ஒரு நிலத்துக்கு அப்ரூவல் வாங்க, கோப்பு சமர்ப்பிக்க ஒரு நாள், நிலத்தை ஆய்வு செய்ய விதிப்படி 14 நாள், ஆவணங்களை ஆய்வு செய்ய 15 நாள் என அப்ரூவல் கொடுக்க 200 நாட்கள் ஆகும்.

ஆனால் கோவையில் 122 ஏக்கர் நிலத்துக்கு அப்ரூவல் போட்டிருக்கிறார்கள். இதற்கு டிடிசிபி அப்ரூவல் கொடுத்த நாள் 22.7.2021. அதன்பின் லோக்கல் பாடி அப்ரூவல் கொடுத்த நாள் 28.7.2021. மத்திய அரசின் ரேரே அப்ரூவல் கொடுக்க 2 நாட்கள் என 8 நாட்களில் அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. டிடிசிபி அப்ரூவல் கிடைத்த பிறகு லோக்கல் பாடி அப்ரூவல் வாங்க வேண்டும் என்றால் அதற்குள் சாலை போட்டிருக்க வேண்டும், பார்க்கிற்கு இடம் ஒதுக்கியிருக்க வேண்டும் . எனவே இந்த 8 நாட்களில் எப்படி ரோடு போட்டார்கள் என யாருக்குமே தெரியாது.

இதுபோன்று ஜி ஸ்கொயர், ஈஞ்சம்பாக்கம், ஈகாட்டூர், நீலாங்கரை, கோவை, குன்னக்காடு என 15 இடங்களில் 20 நாட்களுக்குள் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்கள். இங்குதான் திமுக விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டிருக்கிறது.

அதாவது சிஎம்டிஏ அப்ரூவல் ஆன்லைன் மூலமாகத்தான் நடக்கும், ஆப்லைன் மூலமாக நடக்காது என திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு அரசாணை போட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர் அப்ரூவலுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனரோ அதற்கு ஒருமணி நேரம் முன்னர் மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும். அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் ஒரு மணி நேரத்தில் இந்த லிங்க் இயங்காது. இதனால் யாரும், எங்கேயும் நிலம் வாங்கக் கூடாது என்ற காரணத்திற்காக ஜி ஸ்கொயருக்கு மட்டுமே இந்த ஆன்லைன் லிங்க் செயல்படுகிறது.

ரேரே அப்ரூவல் மத்திய அரசினுடையது என்றாலும், அதில் ஆட்களை போடுவதற்கு மாநில அரசுக்கு மத்திய அரசு அதிகாரம் கொடுத்திருக்கிறது. அதன்படி ரேரேவில் யார் வர வேண்டும் என்பதை மாநில அரசு தீர்மானிக்கிறது.

ரேரே மற்றும் கிரெடாய்(இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு) என அனைத்து நிறுவனத்திலும் முதல்வர் குடும்பத்தில் இருக்க கூடிய புள்ளிகள் நுழைந்துவிட்டனர். குறிப்பாக சிஇஓ இல்லாத சிஎம்டிஏவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சிஇஓ பதவியை கொண்டு வந்தனர். ஜி ஸ்கொயர் நிறுவனத்தை தவிர மற்றவர்களின் அப்ரூவல் நடைமுறையை நிறுத்திவைக்க வேண்டும் என்பது தான் இந்த சிஇஓ வேலை.

இதில் சீனியர் பிளானராக இருக்கக் கூடியவர் சிஎம்டிஏவில் மிகவும் முக்கியமானவர். இப்போது ருத்ரமூர்த்தி என்பவர் இருக்கிறார். அவர் சொல்லும் பொதுவான டைலாக் என்னவென்றால், “நான் முதல்வரின் குடும்பத்தின் ஆள். பேப்பர் எல்லாம் கொடுத்துவிட்டு போங்கள். அப்ரூவல் கொடுக்கும் போதுதான் கொடுப்போம்” என சொல்லுவார். ஆனால் ஜி ஸ்கொயருக்கு மட்டுமே அந்த ஆன்லைன் லிங்க் வேலை செய்கிறது.

ஜி ஸ்கொயர் பெயர் வெளியே தெரியவந்ததால் தற்போது 6 புதிய நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர். முதல் கம்பெனி சன்ஷைன் ஹோல்டிங் இந்தியா பிரவேட் லிமிடெட். இதில் முதல்வரின் மருமகன் முதல் இயக்குநராகவும், மகள் இரண்டாவது இயக்குநராகவும் இருக்கின்றனர். லோட்டஸ் பெவின் டெவலப்பர்ஸ் எல்எல்பி என்ற இரண்டாவது நிறுவனத்தை ஹைதராபாத்தில் பதிவு செய்திருக்கின்றனர். இதில், முதல்வரின் மருமகன் முதல் இயக்குநராகவும், பிரசாந்த் ரெட்டி என்பவர் இரண்டாவது இயக்குநராகவும் உள்ளனர். இதுபோன்று சில நிறுவனங்களில் முதல்வரின் மகள், மருமகன், அண்ணாநகரைச் சேர்ந்த மோகன் கார்த்தி, ஜி ஸ்கொயர் பாலாவின் துணைவியார் ஸ்ரீகலா ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.

ஒரு நிறுவனத்துக்கு மட்டும் எதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், ஒரு நிறுவனத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்க ஒரு துறை இயங்க வேண்டுமா என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பதில் கொடுக்க வேண்டும். ஒருகாலத்தில் 2ஜி திமுகவுக்கு முடிவுரை எழுதியிருந்தது. தற்போது ஜி ஸ்கொயர். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *