wதமிழக இலவச மின்சாரத் திட்டங்களுக்கு ஆபத்து?

politics

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது. இந்த மசோதாவில், மாநில மின்சார வாரியங்களை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மின் உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014, 2018 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்து தோற்றுப் போன இந்தத் திருத்தச் சட்டத்தை, மாநிலங்கள் எல்லாம் கரோனா நோய்த் தொற்று பேரிடரைச் சமாளிக்கும் உயிர்காக்கும் முயற்சியில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கொண்டு வந்து – கருத்துக் கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமுகமான மத்திய – மாநில உறவுகளை அடியோடு வெறுக்கும் ஒரு பிரதமராக -அடுத்தடுத்த அதிகாரப் பறிப்புகள் மூலம் நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட இனிமேல் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தேர்வுக் குழுவே தேர்வு செய்யும். தமிழ்நாடு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்த தேர்வுக்குழுவில் இடம்பெறவே முடியாது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார மானியங்களைப் படிப்படியாகக் குறைத்து அதற்கான பணத்தை நேரடியாக நுகர்வோருக்கு வழங்கிட வேண்டும் என்று கொண்டு வரப்படும் சட்டத் திருத்தம் – திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை – நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின்,

“நமது அரசியல் சட்டப்படி மின்சாரம் பொதுப்பட்டியலில் (Entry 38) இருக்கிறது. புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் 2020-ன் மூலம், மாநிலத்திற்கு என்றே வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரத்தையும் – பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொள்ளும் ஆணவப் போக்காகும்” என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், “மின்சாரத்தை மத்திய அரசு மயமாக்கும் இந்த கருப்புச் சட்டமான புதிய மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ அதிமுக அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும். பாஜக அல்லாத மாநில அரசுகள் அனைத்தும் இந்த சட்டத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் அடுத்தகட்டமான இந்தச் சட்டத் திருத்தத்தை, மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *