ஊராட்சி நிர்வாகங்களில் எந்தக் கட்சி இருந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியினை தருவேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.
அதில், “மே 1இல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதுவரை ஆண்டுக்கு 4 முறை ஏனோதானோவென பெயருக்கு நடைபெற்று வந்த கிராமசபைக் கூட்டங்கள், இனி முறையாகவும் முழுமையாகவும், ஆண்டுக்கு 6 முறை பயனுள்ள வகையில் நடைபெறவும், அதில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் ஊர் நலனுக்கான தீர்மானங்களை நிறைவேற்றிச் செயல்படுத்தவும், நமது அரசு விதி எண் 110-இன்கீழ் அறிவித்துள்ளது.
நாடு போற்றும் வகையில் நல்லாட்சியை வழங்கி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, உள்ளாட்சியிலும் அதனை நடைமுறைப்படுத்தி ஊராட்சிகள் தோறும் செயல்படுத்தி வருகிறது. எப்போதெல்லாம் திமுகழகம் ஆட்சி அமைகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் ஊராட்சிக் கட்டமைப்பு வலிவும் பொலிவும் பெறுவது வழக்கம். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டதுடன், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கி அவர்கள் அதிகாரம் பெற வழிவகுத்தார். ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்திச் சிறப்பாகச் செயல்படுத்தினார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், “அன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்கள் சுயலாபத்தை மட்டுமே கணக்கிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். 2016 முதல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மக்களாட்சியைப் பாழடித்தனர். ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.கழகம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் ஊராட்சிகள் தோறும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தியது. ‘மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம்.. மக்கள் மனதை வெல்வோம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து, ஏறத்தாழ 12 ஆயிரம் ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை தி.மு.கழகம் கேட்டறிந்தது. 10 ஆண்டுகளாக ஆட்சி நிர்வாகத்தினர் எட்டிப்பார்க்காத குக்கிராமங்களையும் கழகத் தொண்டர்கள் ஓடோடித் தேடிச் சென்றனர்.
மக்களை நாடிச் சென்று, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர். திமுக அரசு அமைந்ததும், உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற உறுதிமொழியைக் கழகத்தினர் வழங்கினர். தமிழ்நாட்டு மக்கள் இப்போது உங்களில் ஒருவனான என்னிடம் பெரும் நம்பிக்கையுடன் ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவனாகவும், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுபவனாகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடைக்கோடி கிராமம்வரை மக்களாட்சியின் காற்று வீச வேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும் என்கிற திராவிட மாடலின்படி அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். 50 விழுக்காட்டிற்கு மேல் பெண்கள் பங்கேற்றுள்ள உள்ளாட்சி அமைப்பு என்பதால், வீட்டைப் போல நாட்டையும் அவர்கள் செழிக்கச் செய்திடுவார்கள் என்கிற நம்பிக்கை என்னுள் நிரம்பியிருக்கிறது. மாநகராட்சி தொடங்கி ஊராட்சிகள் வரையிலான பொறுப்புகளில் தி.மு.கழகம் ஏறத்தாழ 90 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் 5 விழுக்காடு அளவில் இருக்கிறார்கள். நிர்வாகப் பொறுப்புக்கு வந்த பிறகு கட்சி வேறுபாடுகளுக்கு இடம் கிடையாது. எல்லாரும் தமிழ்நாட்டினுடைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள்தான்.
முந்தைய ஆட்சியாளர்கள் போல எதிர்க்கட்சிகள் பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிப்பது, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, திட்டங்களைக் கிடப்பில் போடுவது போன்ற காழ்ப்புணர்வு ஓரவஞ்சனைச் செயல்பாடுகள் கழக அரசில் நிச்சயம் இருக்காது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊராட்சி நிர்வாகங்களில் எந்தக் கட்சி இருந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியினை வழங்கிடும் பொறுப்பினை உங்களில் ஒருவனான நான் ஏற்றிருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் என் உறவுதான். மே 1 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**