bபாஜக அரசின் தமிழ் வெறுப்பு: ஸ்டாலின்

politics

கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பாடத் திட்ட சர்ச்சைக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். வாரத்தில் இரண்டு மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்தி விட வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழுக்கு மட்டும் தனி விதிகளா என இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “அகிலம் போற்றும் செம்மொழி மீது, வெறுப்பைக் காட்டியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. வெறுப்புணர்வைக் கக்கும் இந்த நிபந்தனைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எக்காரணம் கொண்டும் தமிழுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது” என்று சாடியுள்ளார்.

சமஸ்கிருதத்தை, தமிழகத்தில் முடிந்த இடங்களில் எல்லாம் புகுத்தி விடத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு- தமிழ் மொழியை மட்டும் இவ்வாறு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார் ஸ்டாலின்.

“ஆறாம் வகுப்பிலிருந்துதான் தாய்மொழி கற்றுக் கொடுக்கப்படும் என்ற விதி, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கே விரோதமாக இருக்கிறது. 5, தேவைப்பட்டால் 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி பயிலலாம் என கல்விக் கொள்கையில் அறிவித்தது, இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சக எண்ணத்துடன் ஏமாற்றுவதற்கு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அதனால்தான் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,

தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கான இலவச எண்ணில் முதலிடத்தில் தமிழ் இருந்த நிலையில் தற்போது 9 ஆவது இடத்துக்கு மாற்றப்பட்டு, முதலிடத்தில் இந்தி உள்ளது. இதுபற்றி பேசிய ஸ்டாலின், “சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழை முதலிடத்தில் வைக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழ் மீது அனாவசியமாக கை வைக்க வேண்டாம்! மீண்டும் ஒரு போராட்டக் களத்திற்குத் தமிழகத்தைத் தள்ளிவிட வேண்டாம்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

*எழில்*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *