அதிக நன்கொடை வாங்கிய கட்சிகளில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த கணக்கு விவரங்களின் அடிப்படையில், 2018-19 ஆம் நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக 742 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் 437.04 கோடி ரூபாய் நன்கொடை வாங்கியது. கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் அது 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2017-18ஆம் நிதியாண்டில் 26 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற காங்கிரஸ் கட்சி, 2018-19ஆம் நிதியாண்டில் 457 சதவிகிதம் அதிகமாக 148.58 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
“4,483 நன்கொடையாளர்களிடம் இருந்து 742.15 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றதாக பாஜக தெரிவித்துள்ளது. இவர்களில் 1,575 பேர் கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மட்டும் 698.092 கோடி ரூபாய் நிதியை பாஜகவுக்கு அளித்துள்ளனர். 2,741 தனிநபர்கள் 41.70 கோடி நிதி அளித்துள்ளனர்.
அதுபோலவே காங்கிரஸ் 605 நபர்களிடம் இருந்து 148.58 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. அதில் 122 கார்பரேட் மற்றும் தொழில் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 122.5 கோடி நிதியைப் பெற்றுள்ளது. 482 தனிநபர்கள் மூலம் 25.39 கோடி நிதியைப் பெற்றுள்ளனர்” என்று ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் கூறுகிறது.
2018-19ஆம் நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கும் சோ்த்து எலக்டோரல் டிரஸ்ட் என்ற அமைப்பு மொத்தம் ரூ.455.15 கோடி நன்கொடை அளித்துள்ளது.
இவையனைத்தும் 20,000 மேல் பெறப்பட்ட நன்கொடையை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 20,000 ரூபாய்க்கு அதிகமாக யாரிடமும் நன்கொடையும் பெறவில்லை. 13 ஆண்டுகளாகவே பகுஜன் சமாஜ் இவ்வாறு தெரிவித்துவருவதாக ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் கூறுகிறது.
**த.எழிலரசன்**
�,