கடலூரில் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் என்ற பகுதியில் நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயல் தாக்கத்தின் காரணமாக இந்த தொழிற்சாலை சேதமடைந்தது. அப்போது மூடப்பட்ட இந்த தொழிற்சாலை தற்போது வரையில் திறக்கப்படவில்லை.
ஏறத்தாழ 1000 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதால் இங்கிருந்து இரும்பு பொருட்கள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
ஆலையின் பயன்பாட்டுக்காக இரும்பு உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் ஆலை வளாகத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை கொள்ளையடிக்க அடிக்கடி கொள்ளையர்கள் இந்த ஆலைக்குள் புகுந்து வருகின்றனர்.
அதன்படி இன்று (மே 11) அதிகாலையும் கொள்ளை சம்பவம் நடைபெற இருப்பதாக புதுசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு கொள்ளையர்களை பிடிக்க போலீசார் சென்றனர்.
சுமார் 20 கொள்ளையர்கள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் வருவதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை போலீசார் மீதும் அங்கிருந்த ஆலை காவலாளி மீதும் வீசியுள்ளனர்.
6 பெட்ரோல் குண்டுகள் வீசியதில், 3 குண்டுகள் வெடித்த நிலையில் போலீசார் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் வந்து விழுந்தன. இதனால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை இந்த ஆலையிலிருந்து மட்டும் 1500 க்கும் டன்னுக்கு மேல் இரும்பு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன
**-பிரியா**