கலைஞர் விழா – எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதட்டி வரவேற்ற பேச்சு!

politics

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா சென்னையில் நேற்று திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அவர், கலைஞரின் கலை, இலக்கிய, ஆளுகைத் திறன்களைக் குறிப்பிட்டு புகழ்ந்தார்.

கலைஞருக்கு திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட சிலையின் பீடத்தில் அவருடைய ஐந்து பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன. அதே வாசகங்கள் அரசாங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சாலை சிலையின் பீடத்திலும் பதிக்கப்பட்டுள்ளன. அதில், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் எனும் வாசகமும் அடக்கம்.
அண்மையில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது சர்ச்சைக்கும் உள்ளாகியது. இந்த நிலையில் நேற்றைய விழாவில் பேசிய குடியரசுத் துணைத்தலைவர், தாய்மொழி எல்லாருக்கும் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டது அரங்கில் பெருத்த வரவேற்பைப் பெற்றது.


கலைஞரைப் பற்றிப் பேசுகையில், “அவர் திறம்பட்ட ஆட்சியாளர். நிலையான ஆட்சியைத் தந்தவர்” என ஆங்கிலத்தில், தனக்கே உரிய அடுக்குமொழியில், வெங்கையா குறிப்பிட்டார். அதே பாணியில் தொடர்ந்து, “கீழ்நிலையில் உள்ள மக்களின்பால் அக்கறைப்பட்டவராக கலைஞர் இருந்தார். ஒடுக்கப்படுகிற, துன்பப்படுகிற, அழுத்தப்பட்டுக் கிடக்கிற மக்களின் நலனில் என்றும் கவனமுள்ளவராக இருந்தார். பல்வேறு துறைகளில் மக்களுக்கு சமூகநீதி கிடைக்கச் செய்தது, கலைஞரின் தனித்துவம்” எனப் பேச, முன்வரிசையில் இருந்த அமைச்சர் பொன்முடி, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போன்றவர்கள் புன்னகையுடன் அதை ரசித்துக் கேட்டனர்.
தொடர்ந்து பேசுகையில், “எந்த மொழியையும் திணிக்கக் கூடாது” என்று வெங்கையா கூறியதும் எழுந்த கைதட்டல்கள், எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது எனக் குறிப்பிடவும் சுருதி குறைந்து போய்விட்டது.
நொடிகளில் சுதாரித்தபடியாக, “எந்த அளவுக்கு மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியுமோ, அந்த அளவுக்கு கற்கலாம். பரந்த தளத்தில் வேலைசெய்வீர்கள் என்றால் பெருமளவு மக்கள் பேசும் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். பன்னாட்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், முதலில் தாய்மொழியில் புலமைத்துவம் பெற வேண்டும். நான், கலைஞரை மிகவும் மதிப்பதற்குக் காரணம், அவர் தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டை மேம்படுத்தினார். தமிழ் இலக்கியத்தையும் வளர்த்தெடுத்தார். பொது வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொருவரும் இவ்வாறு செய்ய வேண்டும்” என்றும் பேச்சை அதன்போக்கில் விரைவாகக் கொண்டு சென்று முடித்தார் வெங்கையா.
கலைஞரின் இலக்கியத் திறனைப் பற்றியும் குறிப்பிட்டு, குடியரசுத் துணைத்தலைவர் புகழாராம் சூட்டினார். “மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும். மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கட்சிகளுக்கு இடையிலான அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, மைய, மாநில அரசாங்கங்கள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்” என்றும் குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக்கொண்டார். அவரின் இந்தப் பேச்சுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சியினரும் கைதட்டி ஆமோதித்தனர்.
மரபுப்படி அவருடைய எழுதிவைக்கப்பட்ட உரையில் உள்ளதைத் தாண்டி, அவர் இயல்பாகப் பேசியது விழாவுக்கு வந்திருந்தவர்களைக் கவர்ந்தது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *