டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா? அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

politics

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் ஆன்லைனில் வந்தது.”ஆளுங்கட்சியான திமுக தனது ராஜ்யசபா பட்டியலை அறிவித்து ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுகவில் ராஜ்யசபா பட்டியல் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே?” என்ற கேள்வியை எழுப்பியது இன்ஸ்டகிராம்.

இதற்கு பதில் அளித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுகவுக்கு வரும் ராஜ்யசபா தேர்தலில் இரண்டு இடங்கள் கிடைப்பது உறுதி. ஆனால் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய செய்வதில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ராஜ்யசபா பற்றிய பேச்சுக்கள் எழுந்த உடனேயே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒரு இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற தகவல்கள் அதிமுகவிலிருந்து கசிந்தன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக அரசின் பழிவாங்கல் போக்கால் கைது செய்யப்பட்ட ஒரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான். சோர்ந்து கிடந்த அதிமுகவுக்கு அவரது கைது கொஞ்சம் உயிர் கொடுத்தது என்றே கூறலாம். நிபந்தனை ஜாமினில் திருச்சியில் தங்கி கையெழுத்திட்ட ஜெயக்குமார் அங்கே திருச்சி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார். அப்போதே எடப்பாடி பழனிச்சாமி சசிகலா எதிர்ப்பு என்பதில் தீவிரமாக இருக்கும் ஜெயக்குமாருக்கு ஒரு நல்ல பதவியைக் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தார். இந்த அடிப்படையில் ஜெயகுமாருக்கு ராஜ்யசபா கிட்டத்தட்ட நிச்சயம் என்று அவரது வட்டாரத்திலேயே நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

அதேநேரம் ஜெயகுமாரின் மகனும் முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டால் அப்பாவுக்கும் மகனுக்கும் எம்பி வாய்ப்பா என்று கேள்வி எழும். இதுபற்றி ஜெயக்குமாரிடமே எடப்பாடி கேட்டதாகவும் ஆனால் ஜெயக்குமார் இப்போது தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைப்பதற்கு விரும்புகிறார் என்றும் சொல்கிறார்கள்.

ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா எம்பி பதவி தருவதற்கு எடப்பாடி கிட்டத்தட்ட சம்மதித்தாலும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஜெயக்குமாருக்கு பதவி கிடைப்பதை விரும்பவில்லை என்கிறார்கள். எடப்பாடியின் முழு ஆதரவாளராக இருக்கும் ஜெயக்குமார் டெல்லி சென்றால் எடப்பாடிக்கான லாபிகளில் தீவிரமாக ஈடுபடுவார் என கருதுகிறார் பன்னீர்செல்வம். சமீபத்தில் ஜெயக்குமார் உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பன்னீர்செல்வம் நினைத்திருந்தால் ஜெயக்குமாரின் கைது நடவடிக்கையை ஆளுங்கட்சி புள்ளிகளிடம் பேசி தடுத்திருக்க முடியும். ஆனால் பன்னீர்செல்வம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் ஜெயக்குமார் கைதாகட்டும் என்று விட்டுவிட்டார். அப்பேர்பட்ட பன்னீர்செல்வம் டெல்லி வரை ஜெயக்குமாரை செல்ல விடமாட்டார் என்கிறார்கள் அவரது வட்டாரங்களில். இதற்காகவே ஒரு முக்குலதோர் ஒரு வன்னியர் என இருபெரும் சமுதாயங்களுக்கு ராஜ்யசபா வாய்ப்பை கொடுக்கலாம் என பன்னீர்செல்வம் எடப்பாடியிடம் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் ஐடி விங் மண்டல செயலாளர் கோவை சத்யன் தற்போது ராஜ்ய சபா செல்வதற்காக தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதேபோல் அதிமுக சீனியர்களில் ஒருவரான செம்மலை தன்னை ராஜ்ய சபாவுக்கு அனுப்பும்படி எடப்பாடியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். வன்னியர் கோட்டாவில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகமும் டெல்லி செல்வதற்கு முயற்சித்து வருகிறார். நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் உள்ளிட்ட சிலரை பன்னீர்செல்வமே தொடர்பு கொண்டு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து நீங்கள் கடிதம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்.
ஏற்கனவே வைத்தியலிங்கம், கேபி முனுசாமி போல சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ராஜ்ய சபா பதவியை பாதியிலேயே விட்டுவிட்டு வரக்கூடிய எண்ணம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டாம் என்பதில் மட்டுமே எடப்பாடியும் பன்னீரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
முக்குலத்தோருக்கு ஒன்று வன்னியருக்கு ஒன்று என்ற பன்னீர்செல்வத்தின் திட்டத்தை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி இப்போதுவரை அதிமுகவில் ஓடிக்கொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *