அண்ணாமலை மீது மாரிதாஸ் சரமாரி விமர்சனம்!

politics

அண்மையில் கைது செய்யப்பட்டு சர்ச்சைக்குள்ளான யூடியூபர் மாரிதாஸ் பாரதிய ஜனதா கட்சியில் சேரக் கூடும் என கடந்த சில வாரங்களாகவே யூகங்கள் வலிமையாக வெளிவந்தன.
திமுக அரசை விமர்சித்தார் உள்ளிட்ட புகார்களில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்… அவர் மீதான சில வழக்குகள் ரத்து செய்யப்பட தற்போது அவர் வெளியில் இருக்கிறார்.

மாரிதாஸை கைது செய்ததற்கு பாஜக கடுமையான கண்டனங்கள் தெரிவித்த நிலையில் மாரிதாஸ் விடுதலையான பிறகு பாஜகவில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் சேரவில்லை. மாரிதாஸ் பாஜகவுக்கு வருவதற்கு தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முட்டுக்கட்டை போடுகிறார் என்றும் மாரிதாஸ்க்கு உரிய பதவி அளிக்க அண்ணாமலை விரும்பவில்லை என்றும் பாஜகவில் இரு தரப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் மே 11ஆம் தேதி இரவு மாரிதாஸ் தனது சமூகத் தளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் பாஜக உள்ளிட்ட ஏதோ ஒரு கட்சிக்கு வருவதற்கு தாமதம் ஆகிறது என்றும் அதற்கான காரணத்தையும் பாஜக கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாட்டில் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையும் விரிவாக பேசியுள்ளார்.
தனக்கு எந்த தனிநபரும் முட்டுக்கட்டை போட வில்லை என்று குறிப்பிட்டுள்ள மாரிதாஸ் தான் பதவி கேட்டு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேநேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பெயர் குறிப்பிடாமல் இந்த வீடியோவில் விமர்சித்திருக்கிறார். அதற்கான ஆதாரமாக பல பாஜகவினர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து மாரிதாஸின் பதிவிலேயே அவருக்கு பின்னூட்டமிட்டு வருகிறார்கள்.

“கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 138 நகராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு 15 நகராட்சிகளில் தான் போட்டியிடக்கூடிய கட்டமைப்பு உள்ளது. பல இடங்களில் முழுமையான அளவு வேட்பாளர்களை கூட நிறுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகள் இருக்கின்றன. அங்கே பாஜக 7 வார்டுகளில் தான் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அந்த நகராட்சியில் பாஜக போட்டியிலேயே இல்லை என்பது ஒரு விஷயம். இன்னொரு விஷயம் உங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும் அதை தவிர்ப்பதற்கு நீங்களே காரணமாக இருக்கிறீர்கள். பாஜக போட்டியிடாத 19 வார்டுகளில் தாமரைக்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைப்பவர்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள்? திமுக, அதிமுகவிடம் கட்டமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் பாஜகவிடம் அந்தக் கட்டமைப்பு பலம் இல்லை. அமைப்பை உருவாக்காமல் வலிமையான கட்சியாக பாஜகவை உருவாக்க முடியாது. கட்சி பலவீனமாக இருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் சோசியல் மீடியாவில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், 2024-ல் கூட பெரிய மாற்றத்தை பார்க்க முடியாது. சோசியல் மீடியா கட்டமைக்கக் கூடிய பிம்பத்திற்கும் உண்மைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நமக்குத் தேவை செயலாக்கம். மாவட்ட வாரியாக வட்ட வாரியாக செயல் திட்டத்தோடு கீழே இறங்க வேண்டும். இதற்கு தினமும் நாம் மீடியாவை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது” என்று குறிப்பிட்டிருக்கிறார் மாரிதாஸ்.

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது, “நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை. திராவிடம் பிளஸ் வேண்டும் என்கிறேன்” என கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன் கோவையில் அளித்த பேட்டியில் கூட நானும் திராவிடன் தான் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதுபற்றிக் குறிப்பிட்டுள்ள மாரிதாஸ், “திமுக , அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்றுதான் இத்தனை நாளாக பேசிக் கொண்டிருக்கிறோம். திமுகவை எதிர்ப்பதற்காக நாம் வேறுவழியில்லாமல் அதிமுகவை ஏற்றுக்கொண்டோம். ஆனால் இப்போது இருக்கக்கூடிய நிலைமையில் அதிமுகவை ஏற்றால் நம்மை ஏமாற்றும் பேர்வழி என்று சொல்லிவிடுவார்கள். ஸ்டாலினோடு ஒப்பிட்டால் எடப்பாடி ஆட்சி நல்லாட்சி தான். ஆனால் அது புனிதமானது கிடையாது. எனக்கு தெரிந்து அதிமுக ஆட்சியில் 24% கமிஷன் அடித்தார்கள். திமுக வும் அதிமுக வும் ஒன்றுதான்.

அதனால் தான் மாற்று சித்தாந்தத்தை உருவாக்கி தேசியவாதத்தோடு கூடிய ஒரு மாற்று சக்தியை உருவாக்க நாம் நினைக்கிறோம். இப்படி இருக்க திராவிட சித்தாந்தத்தை எதிர்த்து திராவிடம் பிளஸ் என்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?” என்று பெயர் குறிப்பிடாமல் அண்ணாமலைக்கு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார் மாரிதாஸ்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *