வன்னியர் இட ஒதுக்கீடு: தடையை நீட்டித்த உச்ச நீதிமன்றம்!

politics

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 16) மறுத்திருக்கிறது. இதன் மூலம் இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையும், அரசுப் பணி நியமனங்களும் இந்த இட ஒதுக்கீட்டின்படி நடைபெறாது என்று தெரியவந்துள்ளது.

கடந்த எடப்பாடி ஆட்சியில் சட்டமன்றத்தின் கடைசி நாளில் அறிவிக்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை, அடுத்து வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டது.. இதற்கிடையே இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள மற்ற சமுதாயங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இந்த வழக்கில் நவம்பர் 1 ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்றம் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு , பாமக, வன்னியர் சங்கம் ஆகியவை சார்பில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு பிசி, எம்பிசி ஆணையம், தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் ஆகியோர் சார்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 10.5% இட ஒதுக்கீடு படி உயர் கல்வித் துறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக உயர் கல்வித் துறையும் தனியாக ஒரு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆக தமிழ்நாடு அரசு சார்பில் மட்டும் 4 மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோரை மனு தாரர்களாக்கி பாமக சார்பில் 3 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

அதேநேரம் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அமைப்புகளில் வேட்டுவ கவுண்டர்கள் சங்கத்தின் அரசியல் வடிவமான புதிய திராவிடர் கழகம் சார்பில் இந்த வழக்கில் அப்பீல் செய்யப்பட்டால் தங்களையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த மேல் முறையீடு நிலுவையில் இருப்பதால் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை, அரசுப் பணி நியமனங்களில் குழப்பம் நீடிக்கிறது.எனவே இதை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தார். அதன் பின் உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்திலும் முறையிடப்பட்டது.

டிசம்பர் முதல் வாரம், இரண்டாம் வாரம் என்று வரிசையாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு இன்று (டிசம்பர் 17) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன் ஏழாவது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, இவ்வழக்கை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். “பிப்ரவரி 15 வரை வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். அதுவரை இந்த இட ஒதுக்கீடுபடி கல்வி, வேலை வாய்ப்புகளில் இடம் ஒதுக்கப்படக் கூடாது” என்று உத்தரவிட்ட நீதிபதி எதிர் மனு தாரர்கள் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் கே.பாலு, “இன்று நீதிபதி, ‘இந்த வழக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்பானது என்பதால் இதை விரைவாக விசாரிக்க இருக்கிறோம். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நாங்கள் எதிர்மனு தாரர்களுக்கு நோட்டீஸ் வழங்குகிறோம். வழக்கின் இறுதி விசாரணையை பிப்ரவரி 15, 16 தேதிகளில் முழுமையாக உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். இரு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வமான வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’என்று உத்தரவிட்டுள்ளார். .

மேலும், இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் ஏற்கனவே கல்வி, வேலை வாய்ப்புகளில் வாய்ப்பு பெற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த இட ஒதுக்கீட்டுபடி இனி மேற்கொண்டு எந்த மாணவர் சேர்க்கையும், வேலை நியமனமும் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார் வழக்கறிஞர் கே.பாலு.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *