நெல் திருவிழா… டெல்டாவில் ஸ்டாலின் விதைத்த நம்பிக்கை!

Published On:

| By Balaji

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 7 ஆம் தேதி முதல்வர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக நேற்று (ஜூலை 6) தனது சொந்த ஊரான திருவாரூருக்கு வருகை தந்தார்.

ஸ்டாலினின் அமைச்சரவையில் காவிரி டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதை பலரும் வருத்தமாகக் குறிப்பிட்ட நிலையில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!. காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி”என்று தனது ட்விட்டர் பதவில் குறிப்பிட்டு, ‘நானே டெல்டாகாரன் தான்”என்று கூறி சர்ச்சைக்கு பதிலளித்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தின் அரசு கொறடாவாக கோவி. செழியன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் என டெல்டாவுக்கு பதவிகளைத் தந்த பிறகு ஜூலை 6 ஆம் தேதி முதன் முறையாக தன் தாய் மண்ணுக்கு வருகை தந்தார் ஸ்டாலின்.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்து, திருச்சியில் இருந்து கார் வழியாக தஞ்சாவூர் வந்து அங்கிருந்து திருவாரூருக்கு வடுவூர், மன்னார்குடி வழியாக வந்தார் ஸ்டாலின். பெரும்பாலும் திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் கொரடாச்சேரி வழியாக திருவாரூர் வந்துவிடுவார். ஆனால் இம்முறை வடுவூர் மன்னார்குடி வழியாக வந்திருக்கிறார்.

தஞ்சையை அடுத்து, திருவாரூர் மாவட்ட எல்லையான வடுவூரில் பெரும் வரவேற்புக்குப் பின்னர் வடூவூரில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டார் முதல்வர். அப்போது நெல்கொள்முதல் நிலைய தொழிலாளர்களுடன் பேசினார். அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது வருடா வருடம் நெல் திருவிழா நடத்தி வந்த, மறைந்த நெல் ஜெயராமன் பெயரால் செயல்பட்டு வரும் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தனர். இந்த மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அசோகன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பாரம்பரிய நெல் ரகங்களை காப்பாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

சேலம் சென்னா, இலுப்புக்கு சம்பா, கருப்புக் கழனி, சீரகசம்பா போன்ற ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் பயிரிடப்பட்டு வரும் பாரம்பரிய நெல் வகைகளை முதல்வர் ஸ்டாலின் கைகளில் கொடுத்தபோது முதல்வர் ஆச்சரியப்பட்டார். அவரிடம் கிடைத்த நேரத்தில் முக்கிய கோரிக்கைகளை வைத்த நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவிடம் பேசினோம்.

“முதல்வர் திருவாரூர் வருகிறார் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக அவரை சந்திக்க முயற்சிகள் எடுத்தோம். செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பின் போது பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை முதல்வரிடம் எடுத்துரைத்தோம்.

மறைந்த நெல் ஜெயராமன் தொடர்ந்து இந்த பகுதியில் நெல் திருவிழாவை நடத்தி வந்தார். நெல் ஜெயராமன் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விதை வங்கி உருவாக்க வேண்டும், மறைந்த நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் கல்லூரி அமைக்கப்பட வேண்டும், இயற்கை விவசாயத்தை எடுத்து செய்ய இளைஞர்கள் தற்போது அதிகமான பேர் முன் வருகிறார்கள். அவர்களுக்கு உரிய வழிகாட்டவும், முறைப்படுத்தவும் நம்மாழ்வார் வேளாண் கல்லூரி அமைக்கப்பட வேண்டும், தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தில் பாரம்பரிய நெல் வகைகளின் அரிசியை பயன்படுத்துவதன் மூலம் இதை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும், ஒவ்வொரு பாரம்பரிய நெல்வகைக்கும் தனிப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன, அதை ஆவணப்படுத்த வேண்டும், இந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முதல்வரிடம் முன் வைத்தோம். நிச்சயம் இதுபற்றி பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். இது எங்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது” என்கிறார் ராஜீவ்.

மேலும் நெல் ஜெயராமன் 5 ஆயிரம் பேருக்கும் மேல் பங்கேற்கும் வகையில் நடத்தி வந்த நெல் திருவிழா அண்மை வருடங்களாக கொரோனா காரணமாக குறைந்த அளவு விவசாயிகளின் பங்கேற்போடுதான் நடக்கிறது. நெல் திருவிழாவை ஊக்குவிக்க முதல்வர் அதில் கலந்துகொள்ள வேண்டும். முதல்வர் கையால் இயற்கை விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் வகைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதையும் புன்முறுவலோடு அங்கீகரித்துக் கொண்டார் முதல்வர்.

ஒருபக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலைய தொழிலாளர்களின் பாடுகளை நேரடியாகக் கேட்ட முதல்வர், இன்னொரு பக்கம் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கவனமாகக் கேட்டுக்கொண்டார். சுமார் இருபது நிமிடங்கள் சாவகாசமாக அங்கே செலவிட்டு விட்டுப் புறப்பட்டார் முதல்வர்.

பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முதல்வரிடம் இருந்து எதிர்பார்க்கிறது டெல்டா.

**-ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel