jமாநில பட்டியலில் கல்வி : ஸ்டாலின் உறுதி!

politics

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் தரமான உயர்கல்வியை வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு 2 நாள் கூட்டம் இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே உயர்கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகம் உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்விக்குப் பயிலவரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 விழுக்காடு. ஆனால், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது” என்று பெருமிதம் தெரிவித்தார்.

17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என்று தெரிவித்த அவர், ”தொழிற்கல்வி மற்றும் மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை ஒழித்துக் கட்டி, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் அளவில் மேற்படிப்பில் இடம் கிடைக்கச் செய்தவர் கலைஞர்” என்று குறிப்பிட்டார்.

“பல்கலைக் கழகத்தின் தரத்தையும் செயல்பாட்டையும் வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுவோர் துணைவேந்தர்கள்தான். நீங்கள் அனைவரும் அறிவியல்பூர்வமான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை வைத்து, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவலைக்குரியதாக உள்ளது. கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும்.

மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்” என்றும் தனது உரையில் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *